அகமதாபாத்: இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாகக உலகக்கோப்பையை வென்றது மட்டுமின்றி, சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதே வேளையில், ஆன்லைன் ஒளிபரப்பிலும் இந்தப் போட்டி பல புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.
இந்த இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் தளம் நேரலையில் ஒளிபரப்பியது. இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 82.1 கோடி பார்வையாளர்கள் இந்தப் போட்டியை நேரலையில் கண்டு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

இறுதிப்போட்டிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக உயரத் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற பிரபல பாடகர் ரிக்கி மார்ட்டினின் இசை நிகழ்ச்சியின்போது 2.1 கோடி பேர் நேரலையில் இணைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரு அணி கேப்டன்களுக்கும் இடையே டாஸ் போடப்பட்ட நேரத்தில் இந்த எண்ணிக்கை 4.2 கோடியாக அதிகரித்தது.
இந்திய அணியின் பேட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே பார்வையாளர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைத் தொட்டது. பின்னர் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியதும், இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் 43.9 கோடி பேர் போட்டியைப் பார்த்தனர். இன்னிங்ஸ் இடைவேளையின்போது இது 44.3 கோடியாக உயர்ந்தது.

இந்திய அணி 255 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த பிறகு, நியூசிலாந்து அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியபோது 49.9 கோடி பேர் நேரலையில் இருந்தனர். முதல் ஓவர் முடிவடையும்போது பார்வையாளர் எண்ணிக்கை 50.3 கோடியைத் தாண்டியது. இந்த எண்கள் அனைத்தும் கிரிக்கெட் ஒளிபரப்பு வரலாற்றில் முந்தைய சாதனைகளை மிக எளிதாக முறியடித்தன.
இதற்கு முன்பு, இதே தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் ஒரே நேரத்தில் 6.5 கோடி பேர் பார்த்ததே ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் சாதனையாக இருந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியிகளுக்கு இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை 5.9 கோடி பேர் பார்த்ததே ஐசிசி தொடரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை 5.3 கோடி பேர் பார்த்திருந்தனர். இந்த அத்தனை சாதனைகளையும் நேற்றைய போட்டி முறியடித்துள்ளது.
நியூசிலாந்து அணி இலக்கைத் துரத்த முடியாமல் திணறிய நிலையில், ஆட்டத்தின் 19வது ஓவரில் அந்த அணியின் கடைசி விக்கெட் விழுந்தது. இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்த அந்தத் தருணத்தில், ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 74.5 கோடி பார்வையாளர்கள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் நடந்த கோப்பை வழங்கும் விழா மற்றும் வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, உச்சக்கட்டமாக 82.1 கோடியைத் தொட்டது. டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற வரலாற்றுத் தருணத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இணையம் வழியாகக் கண்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.