டாக்கா: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மிகக் கடுமையான கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளது. "இந்தியாவுக்கு வந்து விளையாடச் சம்மதமா? இல்லையென்றால் வெளியேறுங்கள்" என ஐசிசி கெடு விதித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வங்கதேச அணி மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ஐசிசி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. டாக்காவில் நடந்த பேச்சுவார்த்தையில், ஐசிசி ஒரு இறுதி முடிவை அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 21-ம் தேதிக்குள் (நாளை மறுநாள்) வங்கதேச அணி இந்தியா வந்து விளையாடுவது குறித்து உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை வங்கதேசம் இந்தியா வர மறுத்தால், அவர்களுக்குப் பதிலாக டி20 தரவரிசை அடிப்படையில் ஐரோப்பிய அணியான ஸ்காட்லாந்து உலகக்கோப்பைத் தொடரில் சேர்க்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வங்கதேச அணிக்கு கொல்கத்தா மற்றும் மும்பையில் லீக் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தங்கள் போட்டிகளை மட்டும் இலங்கைக்கும் மாற்ற வேண்டும் என வங்கதேச வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. அல்லது இலங்கையில் விளையாடும் அயர்லாந்து அணியின் குரூப்பிற்கு தங்களை மாற்ற வேண்டும் எனவும் கேட்டிருந்தது.
ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்துவிட்டது. "குறிப்பிட்ட எந்த அணிக்கும் இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன" என்று ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரு வாரியங்களுக்கும் இடையே பனிப்போரை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், "உலகக்கோப்பையில் விளையாடாவிட்டாலும் வாரியத்திற்கு நஷ்டமில்லை" என வங்கதேச அதிகாரி ஒருவர் பேசியது சர்ச்சையானது. இதனால் வீரர்கள் ஸ்டிரைக் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது.
தற்போது ஸ்காட்லாந்து அணிக்கு ஜாக்பாட் அடிக்குமா அல்லது ஐசிசியின் மிரட்டலுக்குப் பணிந்து வங்கதேச அணி இந்தியா வருமா என்பது ஜனவரி 21-ல் தெரிந்துவிடும்.