டெல்லி: 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான இந்திய அணி இன்று தங்களது 2வது லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த சூழலில், காயத்திலிருந்து குணமடைந்துள்ள வாசிங்டன் சுந்தர் பேட்டிங் வரிசையில் 9வது வீரராக களமிறங்கினால் பலனே இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, பிப்ரவரி 12 அன்று நமீபியாவுடன் மோதவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன், குல்தீப் யாதவுக்கு போட்டி அனுபவம் அவசியம் என்பதால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற கைஃப் வலியுறுத்தினார். வாஷிங்டன் சுந்தரும் அணியில் இருந்தாலும், எட்டாவது வீரர் வரை பேட்டிங் வலுவாக உள்ளதால், ஒன்பதாவது இடத்தில் சுந்தர் களமிறங்குவது பயன் தராது என்றார். எனவே, இருவரில் குல்தீபுக்கே அவர் ஆதரவளித்தார்.

யூடியூப் சேனலில் பேசிய அவர், "இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், லெக் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள்; நிரூபிக்கப்பட்ட குல்தீப்புக்கு போட்டி அனுபவம் அவசியம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன், அவருக்கு விளையாடும் வாய்ப்பு அளியுங்கள். எட்டாவது வரிசை வரை பேட்டிங் இருப்பதால், சுந்தர் ஒன்பதாவது இடத்தில் வருவது பயனில்லை. பந்துவீச்சில் குல்தீப் வெகுதூரம் முன்னிலையில் இருக்கிறார்."
“சுந்தர் எட்டாவது இடத்தில் களமிறங்கினால் ஒழிய, அவரை ஆடும் லெவனில் காண முடியாது. குல்தீப் அதிகப் பங்களிப்பை வழங்க முடியும். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். பிரேமதாச மைதானத்தில் ஸ்பின்னர்களை நம்பியிருக்க வேண்டும், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்," என்று கைஃப் குறிப்பிட்டார்.
எட்டாவது வீரர் வரை பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் இந்தியாவின் உத்தியை கைஃப் பாராட்டினார். அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியில் இது எவ்வாறு உதவியது என்பதைச் சுட்டிக்காட்டினார். அந்த ஆட்டத்தில் 77/6 என தடுமாறியபோதும், எட்டாவது வரிசையில் வந்த அக்சர் படேல், சூர்யகுமார் யாதவுடன் முக்கியமான 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார்.
"கடந்த போட்டியில் அக்சர் எட்டாவது வரிசையில் பேட்டிங் செய்தார். சூர்யாவுடன் அவரது பார்ட்னர்ஷிப்பால் நாங்கள் வென்றோம். சூர்யா பின்னர் அதிக ரன்கள் எடுத்தார், ஆனால் அந்த பார்ட்னர்ஷிப், எட்டாவது இடத்தில் பேட்டிங் எவ்வளவு முக்கியம் எனக் காட்டுகிறது. எட்டாவது இடத்தில் பேட்டிங் தேவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியை நான் ஒப்புக்கொள்கிறேன்," என்றார்.
நமீபியாவுக்கு எதிரான பேட்டிங் வரிசை குறித்து கைஃப் கணித்தார். அபிஷேக் சர்மா வயிற்று உபாதையால் விளையாட வாய்ப்பில்லை; இதனால் சஞ்சு சாம்சன் இஷான் கிஷனுடன் தொடக்க வீரராகக் களமிறங்கலாம். கடந்த ஆட்டத்தைப் போலவே பேட்டிங் வரிசை இருக்கும் என்றவர், முதல் டி20 உலகக் கோப்பை விளையாடும் ரிங்கு சிங் மீது அழுத்தம் இருக்கும் என்றார். ஹர்திக் ஆறாவது வரிசையில் கூட வரலாம் எனவும் கைஃப் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கையிப் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்ககூடாது என்றார். "இது உலகக் கோப்பை என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். அபிஷேக் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார். சூர்யாவுக்கு கேப்டனாக இதுவே முதல் உலகக் கோப்பை; இஷான் மீண்டும் வந்தார். ஒரு சிலரைத் தவிர, பலர் முதல் முறையாக விளையாடுகிறார்கள் அல்லது மீண்டும் வந்துள்ளனர். சிறிய அணிகள் பல அறியப்படாத சவால்களைக் கொண்டுள்ளன. இது ஒரு வித்தியாசமான போட்டியும், வேறுபட்ட அழுத்தத்தையும் கொண்டது."