மும்பை: டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இ தோல்வியடைந்தது. இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் விராட் கோலி மட்டும் இருந்திருந்தால், போட்டியில் இந்தியா வென்று இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது, தெரிவித்துள்ளார்.
கடினமான இலக்குகளை துரத்தும் ஆட்டங்களில் கோலியின் தாக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அவர் பாராட்டினார். 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய இந்திய பேட்டிங் வரிசை பெரும் சரிவை சந்தித்தது. பவர்ப்ளேயில் முன்னணி வீரர்கள் தடுமாறியதால், நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தில் சிக்கி, விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை.

இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி ஆகும். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஐசிசி தொடர்களில் சந்தித்த முதல் தோல்வியும் இதுவே. இது குறித்து பேசிய தன்வீர் அகமது, விராட் கோலி அணியில் இருந்திருந்தால், இந்த இலக்கை சேஸ் செய்யும் போது இந்தியா அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கும் என்றார்.

"இந்த அணி விராட் கோலியின் தோள்களில் சவாரி செய்தே கிரிக்கெட் விளையாடியது. ஓவருக்கு 12-13 ரன்கள் தேவைப்படும்போது எப்படி உணரும் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். கோலி இன்னிங்ஸை தாங்கிப் பிடித்ததால்தான் மற்றவர்கள் ரன்கள் எடுத்தனர்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "கோலி நிலையாக விளையாடினால், மற்றவர்களும் அவரைப் பின்தொடர்வர். ஆனால் அவர் இப்போது அணியில் இல்லை. ரோஹித் ஷர்மாவும் தனது பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்துவார். விராட் கோலி இந்த அணியில் இருந்திருந்தால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இலக்கை அவரால் நிச்சயமாக எட்டியிருக்க முடியும்," என்று தன்வீர் அகமது தீர்க்கமாக கூறினார்.
மெதுவான அகமதாபாத் ஆடுகளத்தில் 188 ரன்களைத் துரத்திய இந்தியா, 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜஸ்பிரித் பும்ராவின் (3/15) சிறப்பான பந்துவீச்சு தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தியபோதும், பொறுப்பற்ற பேட்டிங் மற்றும் மோசமான ஷாட் தேர்வுகள் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஆனது. 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் இந்த முதல் தோல்வியால், இனிவரும் சூப்பர் 8 போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.