கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எனினும், ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கை செல்லும் என்றும், போட்டிக்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் மோதும் போட்டி பிப்ரவரி 15 அன்று இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இந்த போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விளையாட வரப்போவதில்லை எனத் தெரிந்தும், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐசிசி விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கை செல்லும். ஐசிசி விதிமுறைகளின்படி, வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். போட்டியின் போதான செய்தியாளர் சந்திப்பிலும் கலந்து கொள்வார்கள். போட்டி நாளன்று சரியான நேரத்திற்கு மைதானத்திற்குச் சென்று நடுவரின் அறிவிப்புக்காகக் காத்திருப்பார்கள்," என்று தெரிவித்தார்.
ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு அணி போட்டியிலிருந்து விலகினாலும் அல்லது மைதானத்திற்கு வராவிட்டாலும், எதிரணி மைதானத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வெற்றி வழங்க முடியும். இதன் அடிப்படையில், போட்டி நாளன்று டாஸ் போடும் நேரத்திற்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் தயாராக இருப்பார்.
ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா அந்த நேரத்திற்கு மைதானத்திற்கு வராவிட்டால், போட்டி நடுவர் விதிகளின்படி இந்திய அணிக்கு 'வாக்-ஓவர்' முறையில் வெற்றியை வழங்குவார். இதன் மூலம் இந்திய அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் அணி களமிறங்கக் கூடாது என சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்து தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற சொன்னது. ஆனால், ஐசிசி அதற்கு ஒப்புக் கொள்ளாமல் வங்கதேச அணியை நீக்கி, ஸ்காட்லாந்து அணியை உலகக்கோப்பையில் சேர்த்தது. ஐசிசி மற்றும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்பாகப் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுகளின் கொள்கை முடிவுகளை ஐசிசி மதிக்கிறது. இருப்பினும், இது போன்ற முடிவுகள் உலகளாவிய கிரிக்கெட் அமைப்பைப் பாதிக்கும். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலனுக்கு உகந்தது அல்ல," என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், இந்திய அணி தனது கடமையைச் செய்யத் தயாராக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.