Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்தியாவை காயப்படுத்த நினைத்தால் ஒரே வழி இதுதான்".. பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிய நாசர் ஹுசைன்

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) எதிராகப் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் எடுத்துள்ள தைரியமான முடிவை நான் வரவேற்கிறேன் என்றும், கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலுக்கு எதிராக யாராவது குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

T20 World Cup 2026 Pakistan and Bangladesh got support from Nasser Hussain Slams ICC s Double Standards

"போதும் நிறுத்துங்கள்"

ஸ்கை கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய நாசர் ஹுசைன், "வங்கதேசம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை நான் விரும்புகிறேன். அவர்கள் தங்கள் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்காகக் குரல் கொடுத்தனர். அதேபோல, வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் களமிறங்கியிருப்பதையும் நான் வரவேற்கிறேன். 'போதும் இந்த அரசியல்' என்று யாராவது ஒரு கட்டத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். நாம் மீண்டும் கிரிக்கெட் விளையாடலாமா?" என்று கேள்வி எழுப்புவது போல பேசினார்.

மேலும் அவர், "பாகிஸ்தான் இந்தியாவையோ அல்லது ஐசிசியையோ காயப்படுத்த நினைத்தால், அதற்கு ஒரே வழி இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மூலம் வரும் பணத்தை தடுப்பதுதான். அதைத்தான் அவர்கள் செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

வீரர்கள் கைகுலுக்க மறுத்தது ஏன்?

சமீப காலமாக கிரிக்கெட்டில் அரசியல் புகுந்து விளையாடுவதைக் கண்டு வருத்தப்படுவதாக நாசர் ஹுசைன் கூறினார். "இது மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. முன்பு விதிவிலக்காக இருந்த அரசியல் தலையீடு இப்போது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுப்பதையும், கோப்பையை வாங்க மறுப்பதையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கிரிக்கெட் நாடுகளை இணைக்க வேண்டும், பிரிக்கக் கூடாது" என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமே, கொல்கத்தா அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மானை, அரசியல் காரணங்களுக்காக பிசிசிஐ திடீரென நீக்கியதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா கேட்டால் ஐசிசி மறுக்குமா?

ஐசிசியின் இரட்டை நிலைப்பாடு குறித்து நாசர் ஹுசைன் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். "ஒருவேளை இந்தியா இதே கோரிக்கையை வைத்திருந்தால் ஐசிசி என்ன செய்திருக்கும்? ஒரு தொடருக்கு ஒரு மாதம் முன்பு, 'எங்கள் அரசு அனுமதி மறுக்கிறது, நாங்கள் அந்த நாட்டில் விளையாட மாட்டோம்' என்று இந்தியா கூறியிருந்தால், ஐசிசி அவர்களைத் தொடரிலிருந்து நீக்கியிருக்குமா?

விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். வங்கதேசத்தையும், பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இந்தியாவிடம் பணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்க வேண்டும். தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை நசுக்கினால், கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

நாசர் ஹுசைனின் இந்தக் கருத்துக்கள், ஐசிசி மற்றும் பிசிசிஐயின் செயல்பாடுகள் மீதான விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளன. அதே சமயம், இந்தியா - பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான சமீபத்திய அரசியல் விரிசல் தான் கிரிக்கெட்டில் பிரதிபலிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

Story first published: Thursday, February 5, 2026, 22:00 [IST]
Other articles published on Feb 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+