பாகிஸ்தான் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறது.. ஹர்பஜன் சிங் கடும் எதிர்ப்பு
டெல்லி: பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து பங்களாதேஷ் நீக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நக்வி, தமது நாட்டின் பங்கேற்பு பிரதமரின் ஆலோசனையைப் பொறுத்தது என்று தெரிவித்ததால், புதிய பிரச்சினையை ஏற்படுத்தியது. பங்களாதேஷுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், "பாகிஸ்தான் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தது. 2 vs 1 என்ற ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் விளையாட முயன்றது. பாகிஸ்தான் ஏற்கனவே இலங்கையில் விளையாடி வந்தனர்."

"இது அவர்களின் விஷயமே அல்ல. தேவையில்லாத இடத்தில் ஏன் தலையிட வேண்டும்? இறுதியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மற்றும் அதன் வீரர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள். உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது மிகப்பெரிய இழப்பு," என்று கூறினார்.
"இது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு ஈகோ தொடர்பான விஷயமாக மாறிவிட்டது என்றும், தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, ஆக்கோரஷமான அணுகுமுறையை கையாண்டதன் மூலம் அவர்கள் தவறிழைத்துவிட்டதாகவும் கூறினார். "இந்தியாவுக்கு வர 'வேண்டாம்' என்று உடனடியாகச் சொல்வதற்கு முன், ஐசிசியுடன் பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும்," என்றும் ஹர்பஜன் தெரிவித்தார்.
"டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால், அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் இருந்திருக்காது. ஆனால், இங்கு அவர்களால் உண்மையில் இரண்டாம் சுற்றுக்குச் சென்று, சூப்பர் எட்டில் சில அதிர்ச்சி வெற்றிகளைப் பதிவு செய்திருக்க முடியும். எனவே, இது பங்களாதேஷைத் தவிர வேறு யாருக்கும் இழப்பில்லை." என்று ஹர்பஜன் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. எனினும் அணி அறிவிக்கப்பட்டாலும், டி20 உலககோப்பையில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications