Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: இலங்கை பெண்ணிடம் அறையில் அத்துமீறிய பாகிஸ்தான் வீரர்.. மூடி மறைத்த அணி நிர்வாகம்

லாகூர்: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது. தொடர் தோல்விகள் மற்றும் மோசமான ஆட்டத்தால் சொந்த நாட்டு ரசிகர்களிடமே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் அந்த அணிக்கு, தற்போது மேலும் ஒரு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தங்கும் விடுதியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டல் அறையில் நடந்த அத்துமீறல்

உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் அணி இலங்கையின் கண்டி நகரில் முகாமிட்டிருந்தது. அங்குள்ள கோல்டன் கிரவுன் விடுதியில் வீரர்கள் அனைவரும் தங்கியிருந்தனர். அந்தப் போட்டிக்கு முன்னதாக, பெயர் வெளியிடப்படாத பாகிஸ்தான் வீரர் ஒருவர், தனது அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண் ஊழியரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

அந்தப் பெண் ஊழியர் உடனடியாகக் கூச்சலிட்டு உதவி கேட்டு சத்தம்போட்டுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற விடுதி ஊழியர்கள், அந்தப் பெண்ணை அந்த வீரரிடமிருந்து பாதுகாப்பாக மீட்டனர். உடனடியாக இந்த விவகாரம் விடுதி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. உலகக் கோப்பை தொடரின் போது ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது விடுதி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

T20 World Cup 2026 Pakistan Cricketer Accused of Misbehaving with Hotel Staff in Sri Lanka

காப்பாற்றிய அணி மேலாளர்

விடுதி நிர்வாகம் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியிடம் வலியுறுத்தியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவேத் சீமா, உடனடியாக விடுதி நிர்வாகத்திடம் அந்த வீரர் செய்த செயலுக்காக மன்னிப்பு கோரினார்.

மேலும், அந்த வீரருக்குப் பெரிய அளவிலான அபராதத் தொகையை விதித்து இந்த விவகாரத்தை காவல்துறை வரை செல்லாமல் அவர் தடுத்து நிறுத்தினார். இலங்கை அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது. தற்போது நாடு திரும்பியுள்ள அந்த வீரர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் கூடுதல் விசாரணையை நடத்தி கடுமையான தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் பாகிஸ்தான் வீரர்களின் சர்ச்சைகள்

பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, இளம் பேட்ஸ்மேன் ஹைதர் அலி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல, சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்குச் சென்றிருந்த போது, பாகிஸ்தான் அணியின் மசாஜ் செய்யும் ஊழியரான மலங் அலி என்பவரும் ஒரு பெண் ஊழியரிடம் அத்துமீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் ஒரு வீரர் உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் விளையாட்டிலும் சரி, களத்திற்கு வெளியே நடத்தையிலும் சரி பாகிஸ்தான் அணி தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்து வருவது அந்த நாட்டு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Thursday, March 5, 2026, 11:21 [IST]
Other articles published on Mar 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+