துபாய்: 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்கான புள்ளி வழங்கும் முறை, நெட் ரன் ரேட் கணக்கீடு மற்றும் ரிசர்வ் டே குறித்த விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
நடப்புச் சாம்பியனான இந்திய அணி, இம்முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரின் சுவாரஸ்யமான விதிமுறைகள் மற்றும் பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணித்தால் ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
வெற்றி: லீக் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
மழை/முடிவில்லை: மழை அல்லது இதர காரணங்களால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கைவிடப்பட்டாலோ இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
சமன் (Tie): ஆட்டம் சமனில் (டை) முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்படும்.
புள்ளிப்பட்டியலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் சம புள்ளிகளுடன் இருந்தால், நெட் ரன் ரேட் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்படும். ஒரு அணி ஒரு ஓவருக்குச் சராசரியாக எடுத்த ரன்களிலிருந்து, அந்த அணி ஒரு ஓவருக்கு விட்டுக்கொடுத்த சராசரி ரன்களைக் கழிப்பதன் மூலம் ரன் ரேட் கணக்கிடப்படும். ஒரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனால், அவர்கள் முழுமையாக 20 ஓவர்களும் விளையாடியதாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சூப்பர் ஓவரில் அடிக்கப்படும் ரன்கள் நெட் ரன் ரேட் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அதற்கான பிரத்யேக விதிமுறையும் ஐசிசி விதிகளில் உள்ளது. ஒரு அணி (பாகிஸ்தான்) விளையாட மறுத்தால், எதிரணி (இந்தியா) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அவ்வாறு வெற்றி பெற்ற அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், அந்தப் போட்டியின் ரன்கள் வெற்றி பெற்ற அணியின் ரன் ரேட் கணக்கீட்டில் வராது.
அதேசமயம், போட்டியைப் புறக்கணித்த அணிக்கு (பாகிஸ்தான்) இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த அணி 20 ஓவர்களில் எந்த ரன்னும் எடுக்காமல் முழு ஓவரையும் ஆடியதாகக் கணக்கிடப்பட்டு, அவர்களது ரன் ரேட் கடுமையாகக் குறைக்கப்படும். இது அந்த அணி அடுத்த சுற்றுக்குச் செல்வதைப் பாதிக்கும்.
குரூப் சுற்றுகள் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்குக் கூடுதல் நாள் எனப்படும் ரிசர்வ் டே கிடையாது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு எட்டப்படும். குறைந்தபட்ச ஓவர்கள் கூட வீச முடியாவிட்டால் ஆட்டம் கைவிடப்படும்.
அதேசமயம், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நாளில் ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், ஆட்டம் எங்கு நின்றதோ அங்கிருந்து மறுநாள் (ரிசர்வ் டே) தொடரப்படும்.