மும்பை: இந்திய அணியின் வருங்கால கேப்டன், இளவரசன் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட சுப்மன் கில், இப்போது அணியிலிருந்தே அதிரடியாகத் தூக்கியெறியப்பட்டுள்ளார். ஆனால், அவர் நீக்கப்பட்ட விதமும், அதற்குப் பின்னால் நடந்த அரசியலும் தான் இப்போது பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அகமதாபாத் போட்டியில் சுப்மன் கில்லுக்கு காயம் என்று சொல்லப்பட்டது ஒரு நாடகம் என்றும், அவர் வலுக்கட்டாயமாகப் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்றும் வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் விளையாடவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கில்லுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் இல்லை. அவர் அந்தப் போட்டியில் விளையாடத் தயாராகவே இருந்தார்.
ஆனால், அணி நிர்வாகம் (கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் கூட்டணி) அவரை அணியிலிருந்து நீக்க முடிவு செய்துவிட்டது. அதனால் காயம் என்ற காரணத்தைச் சொல்லி, அவரை வலுக்கட்டாயமாக பெஞ்சில் உட்கார வைத்துள்ளனர். இது சுப்மன் கில்லை அணியிலிருந்து கழற்றி விடுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் படி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், தான் உலகக்கோப்பை அணியில் இல்லை என்ற விஷயம் கடைசி வரை சுப்மன் கில்லுக்கே சொல்லப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் என மதில் மேல் பூனை போல இருந்த மும்மூர்த்திகள் யாருமே, "தம்பி, உங்களை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யவில்லை" என்ற தகவலை கில்லிடம் சொல்லவே இல்லை என்று கூறப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற்ற சனிக்கிழமை காலை வரை கில்லுக்கு இந்த தகவல் கூறப்படவில்லை. இதே சுப்மன் கில் தான் டெஸ்ட் அணி மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன். அவருக்கே தெரியாமல் இப்படி ஒரு திரைமறைவு நிகழ்வு நடந்து இருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
வெறும் மூன்று வாரங்களுக்கு முன்புதான் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார் சுப்மன் கில். ஆனால், லக்னோவில் நடந்த 4வது போட்டி மழையால் ரத்தான அன்றே, கில்லின் தலைவிதி முடிக்கப்பட்டுவிட்டது.
கடந்த 3 போட்டிகளில் 32 ரன்கள் மட்டுமே அடித்தார் என்பது உண்மைதான். ஆனால், கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் கடந்த ஒரு வருடமாகச் சரியாக ஆடவில்லை. அவருக்கு ஒரு நியாயம், கில்லுக்கு ஒரு நியாயமா? என்று கேள்விகள் எழுகின்றன.
ஒரு துணை கேப்டனை, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இப்படி ஈவு இரக்கமின்றி கழற்றிவிட்டது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாக ஒருதரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தான் விளையாட ஆசைப்பட்டும், நிர்வாகம் தடுத்ததால் ஏமாற்றமடைந்த கில், தன்னை நடத்திய விதத்தைப் பார்த்து மனதளவில் உடைந்து போயுள்ளதாகத் தெரிகிறது.
ஃபார்ம் அவுட் என்பது வீரர்களுக்கு சகஜம் தான். ஆனால், தகவல் தொடர்பு கூட இல்லாமல் ஒரு நட்சத்திர வீரரை நடத்திய விதம் பிசிசிஐ மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஐந்தாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடியது கில்லை வெளியேற்ற வைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது அணிக்கு நல்லது என பலரும் கில் வெளியேற்றத்தை பாராட்டி வருகிறார்கள் என்பதும் உண்மையே.