டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியதன் மூலம், தென்னாப்பிரிக்காவின் அடுத்த சுற்று வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
ஏற்கனவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது அணியாகத் தென்னாப்பிரிக்கா அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி இன்று எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இருப்பினும், டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குரூப் டி பிரிவின் புள்ளிப்பட்டியலில் தெளிவான நிலை உருவானது. தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோஹைப் கான் 68 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்சாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை ருசித்தது. பந்துவீச்சில் கலக்கிய அஸ்மதுல்லா ஓமர்சாய், பேட்டிங்கிலும் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். தர்விஷ் ரசூலி 33 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும், அந்த அணியின் சூப்பர் 8 வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. குரூப் டி பிரிவில் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன.
வரும் 17ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி கனடாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், 6 புள்ளிகளுடன் எளிதாகச் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். அப்படி நடந்தால் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.
வெற்றிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், "டி20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த சுற்று வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நாட்டின் பெருமைக்காகக் கடைசிப் போட்டியிலும் வெற்றி பெறப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
குரூப் டி பிரிவில் இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.
பிப்ரவரி 17: நியூசிலாந்து - கனடா
பிப்ரவரி 18: தென்னாப்பிரிக்கா - ஐக்கிய அரபு அமீரகம்
பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் - கனடா
கனடாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து அந்த அணியே அடுத்த சுற்றுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.