டி20 உலககோப்பை சூப்பர் 8 சுற்று முழு அட்டவணை.. X, Y பிரிவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளன
மும்பை: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் உள்ள 12 போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை நடைபெறவுள்ளன. இந்தியாவில் ஐந்து மைதானங்களும், இலங்கையில் இரண்டு மைதானங்களிலும் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. கொழும்பில் நடைபெற்ற போட்டியில், நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தானின் வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 அணிகள் பட்டியல் முழுமையடைந்தது. குரூப் A-யிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், குரூப் C-யிலிருந்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, குரூப் D-யிலிருந்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தகுதிபெற்றன. குரூப் B-யில் எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஜிம்பாப்வேயும், இலங்கையும் முன்னேறின.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் குரூப் X பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெறும். குரூப் Y பிரிவில், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் மோதும். இதில் ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் மோதும். இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
சூப்பர் 8 போட்டிகள் நரேந்திர மோடி (அகமதாபாத்), எம்.ஏ. சிதம்பரம் (சென்னை), ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா), அருண் ஜெட்லி (டெல்லி), வான்கடே (மும்பை) ஆகிய மைதானங்களிலும், இலங்கையின் ஆர். பிரேமதாசா (கொழும்பு), பல்லேகல சர்வதேச மைதானங்களிலும் நடக்கிறது. இதில் வரும் பிப்ரவரி 21 அன்று இரவு 7:00 IST மணிக்கு கொழும்பில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதி சூப்பர் 8 சுற்றை தொடங்குகிறது.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி பிப்ரவரி 22 அன்று இரவு 7:00 IST மணிக்கு அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவையும், பிப்ரவரி 26 அன்று இரவு 7:00 IST மணிக்கு சென்னையில் ஜிம்பாப்வேயையும், மார்ச் 1 அன்று இரவு 7:00 IST மணிக்கு கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி பிப்ரவரி 24 அன்று இரவு 7:00 IST மணிக்கு பாகிஸ்தானுடன் பல்லேகலவிலும், பிப்ரவரி 27 அன்று இரவு 7:00 IST மணிக்கு நியூசிலாந்துடன் கொழும்பிலும் மோதும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால், மார்ச் 4 அன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் அவர்களின் அரையிறுதிப் போட்டி நடைபெறும். இல்லையெனில், அதே மார்ச் 4 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானம் முதல் அரையிறுதிப் போட்டியை நடத்தும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 5 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications