மும்பை: "சுப்மன் கில்லை வீட்டுக்கு அனுப்பியாச்சு.. அடுத்து நீங்கதான்" என்று கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். "மோசமான ஃபார்ம்" என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், புள்ளிவிவரங்களைப் பார்த்தால் கேப்டன் சூர்யகுமார் யாதவின் நிலைமை கில்லை விட படுமோசமாக இருக்கிறது.
சுப்மன் கில் கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் தடுமாறினார் என்பது உண்மைதான். 15 இன்னிங்ஸ்களில் 291 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 137. இது போதாது என்று தான் அவரை நீக்கினார்கள். ஆனால், மறுபுறம் கேப்டன் சூர்யகுமார் யாதவின் 2025ம் ஆண்டு ரெக்கார்டை பார்த்தால் ரத்தக் கண்ணீர் தான் வருகிறது.

அவர் 2025இல் ஆடிய மொத்த இன்னிங்ஸ் - 19. அதில் அவர் எடுத்த ரன்கள் வெறும் 218 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரேட் 123.2 என்பதாக உள்ளது. சர்வதேச அறிமுகத்திற்குப் பிறகு இதுவே அவரது மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட்.
பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, "சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பதால் மட்டுமே அணியில் தப்பித்திருக்கிறார். இல்லையென்றால் அவரும் கில்லுடன் சேர்ந்து வெளியேறியிருப்பார்" என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளது. அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்கள் அதிரடி காட்டும்போது, சீனியர்கள் இப்படி சொதப்புவது அணிக்குச் சுமையாக மாறியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "சூர்யகுமார் யாதவ் உடனடியாக ரன் குவிக்கத் தொடங்கவில்லை என்றால், டிரெஸ்ஸிங் ரூமில் அவரது குரலுக்கு மதிப்பு இருக்காது. இறுதியில் அவரது இடமே பறிபோகும்.
பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவருக்கு வெற்றி மட்டும் தான் முக்கியம். இன்று கில்லுக்கு நடந்தது, நாளை சூர்யாவுக்கும் நடக்கலாம். யாராக இருந்தாலும் அவருக்கு பாரபட்சம் கிடையாது" என்று பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வந்ததன் மூலம், "பெயர் முக்கியல்ல, ஆட்டம் தான் முக்கியம்" என்று பிசிசிஐ நிரூபித்துள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்றால், பேட்டிங்கில் பழைய "மிஸ்டர் 360" ஆக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இல்லையென்றால், உலகக்கோப்பை முடிந்த உடன் கேப்டன் பதவியும் பறிபோகலாம். அத்துடன் டி20 அணியில் இருந்தும் நீக்கப்படலாம்.