மும்பை: ஐபிஎல் விவகாரத்தின் எதிரொலியாக, டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை, பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். "கடைசி நேரத்தில் இடங்களை மாற்றுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று," என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த வங்கதேச அரசு, "இந்தியாவில் ஒரு தனி வீரருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், உலகக்கோப்பை ஆட வரும் எங்கள் முழு அணிக்கும் எப்படிப் பாதுகாப்பு இருக்கும்?" என்று கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து, பாதுகாப்பு கருதி தங்களது உலகக்கோப்பை லீக் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-யிடம் (ICC) முறையிட வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கை குறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் அளித்துள்ள பதில், வங்கதேசத்தின் எதிர்பார்ப்பை உடைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவர் கூறுகையில், "யாரோ ஒருவரின் விருப்பத்திற்காகவோ அல்லது கேலிக்கூத்துக்காகவோ சர்வதேசப் போட்டிகளின் இடங்களை நினைத்த போதெல்லாம் மாற்ற முடியாது. இது நிர்வாக ரீதியாக ஒரு 'பயங்கரமான கனவு' போன்றது.
சற்று யோசித்துப் பாருங்கள்... வங்கதேசத்தை எதிர்த்து விளையாடும் மற்ற அணிகளின் நிலைமை என்னவாகும்? அவர்களுக்கான விமான டிக்கெட்டுகள், தங்குவதற்கான ஹோட்டல் அறைகள் என அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும், ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன (ஒன்று இலங்கையில், இரண்டு இந்தியாவில்).
இதில் ஒரு போட்டியை மட்டும் இலங்கைக்கு மாற்றுவது என்பது ஒளிபரப்பு செய்யும் தொழில்நுட்பக் குழுவிற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். சொல்வதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் நடைமுறைக்குச் சாத்தியமே இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
முன்னதாக, வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. வங்கதேச கிரிக்கெட்டிற்கு ஏற்படும் அவமானத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்பத் தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று ஆவேசமாகப் பதிவிட்டிருந்தார்.
வங்கதேசம் தனது லீக் ஆட்டங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் விளையாட அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:
பிப்ரவரி 7: வெஸ்ட் இண்டீஸ் (கொல்கத்தா, ஈடன் கார்டன்)
பிப்ரவரி 9: இத்தாலி (கொல்கத்தா, ஈடன் கார்டன்)
பிப்ரவரி 14: இங்கிலாந்து (கொல்கத்தா, ஈடன் கார்டன்)
பிப்ரவரி 17: நேபாளம் (மும்பை, வான்கடே)
உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிசிசிஐ-யின் இந்தத் திட்டவட்டமான பதில் மூலம் வங்கதேசத்தின் இடமாற்றக் கோரிக்கை நிறைவேறுவது மிகக் கடினம் என்றே தெரிகிறது.