அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த இமாலய வெற்றியைக் கண்டு உலகமே வியந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் வயிற்றெரிச்சல் மற்றும் பொறாமை பொங்கி உள்ளது. இந்திய அணியின் வெற்றியை கண்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது ஷாசாத், தன் நாட்டில் கிரிக்கெட் மிக மோசமாக உள்ளதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஹார்னா மனா ஹை' என்ற நிகழ்ச்சியில் பேசிய அகமது ஷாசாத், இந்திய அணியின் கட்டமைப்பு மற்றும் அவர்கள் வீரர்களை உருவாக்கும் விதம் குறித்துப் பெருமையாகப் பேசினார். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் நிலைமையைக் குறித்து வேதனைப்பட்டார்.

"பாகிஸ்தானில் திறமைக்கு எந்தக் குறையும் இல்லை, ஆனால் நமது கட்டமைப்பில்தான் (System) பெரிய குறை உள்ளது. இந்தியாவில் திறமையும் இருக்கிறது, அதற்கேற்ற கட்டமைப்பும் இருக்கிறது. அந்த அமைப்பு எப்படித் தரமான வீரர்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்.
சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது அவர் உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வெந்துள்ளார். இஷான் கிஷனும் அப்படித்தான், அணியில் நிரந்தர இடம் இல்லாமல் இருந்த அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து மீண்டும் அணிக்கு வந்து அசத்தியுள்ளார். இதுதான் அந்த அணியின் சிறப்பம்சம்" என்று அவர் பாராட்டினார்.

தொடர் முழுவதும் ரன் எடுக்காமல் தடுமாறி வந்த அபிஷேக் சர்மா குறித்துப் பேசிய அவர், "அபிஷேக் சர்மா மீது எவ்வளவு விமர்சனங்கள், எவ்வளவு நெருக்கடிகள் இருந்தன. ஆனால் இறுதிப்போட்டியில் அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து, நான் இருக்கிறேன் என்று நிரூபித்துவிட்டார். இந்திய அணி பெரிய அணிகளுக்கு எதிராக, பெரிய மேடைகளில் விளையாடி வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.
அதேநேரம் பாகிஸ்தான் அணியைக் கிண்டல் செய்த அவர், "நாமோ ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா போன்ற சிறிய அணிகளை அழைத்து வந்து, அவர்களோடு விளையாடி வெற்றி பெற்றுவிட்டு அதைப் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறோம்" என்று விமர்சித்தார்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது குறித்துப் பேசிய அகமது ஷாசாத், பாகிஸ்தான் அணியின் மனநிலையை அதோடு ஒப்பிட்டார். "சிறந்த அணிகள் சரியான நேரத்தில் தங்கள் உச்சத்தை வெளிப்படுத்தும். இந்திய அணி தாங்கள் விளையாடினால் 250 ரன்களை எடுப்போம் என்று நிரூபித்துள்ளனர்.
ஒருவேளை இந்திய அணிக்குப் பதிலாக நாம்தான் அங்கு இருந்திருந்தால், 180 ரன்கள் எடுத்தவுடனேயே போதும் என்று திருப்தியடைந்திருப்போம். அந்த 180 ரன்களை வைத்துக்கொண்டு பந்துவீச்சாளர்கள் காப்பாற்றுவார்கள் என்று நினைத்திருப்போம். ஆனால் இந்திய அணி அவ்வாறு சிந்திக்கவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மட்டும் சற்று சுதாரித்து செயல்படவில்லை என்றால், இந்திய அணி 275 ரன்களைக் கடந்திருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய தரம் மிக மோசமாக இருப்பதாக வேதனைப்பட்ட அகமது ஷாசாத், "நாம் எந்தத் தரத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம்? ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா அணிகளை வீழ்த்திவிட்டு நாமும் சிறந்த அணி என நினைத்துக்கொள்கிறோம்.
எனவே, ஐசிசி நமக்கு என ஒரு தனி தரவரிசையை (ICC Ranking) உருவாக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுடன் நம்மை ஒப்பிடாமல், கென்யா, உகாண்டா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் மட்டுமே பாகிஸ்தானைத் தரவரிசைப்படுத்த வேண்டும்" என்று நக்கலாகக் கூறினார்.
