Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: “கடவுளின் திட்டம்” என பச்சை குத்திய வீரரை இந்திய பிளேயிங் 11இல் எடுங்க.. கவாஸ்கர் அறிவுரை

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அணித் தேர்வில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாகத் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் கறாராகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏமாற்றும் அபிஷேக் சர்மா

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அடித்த அரைசதத்தைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. இதுவரை மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி வெறும் 12 புள்ளி 71 ஆக உள்ளது.

இது குறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், "அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அவர் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பந்துவீச்சாளர்கள் அவருக்கு எங்கு நெருக்கடி கொடுக்கிறார்களோ, அதே இடத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி விக்கெட்டை பறிகொடுக்கிறார். அரையிறுதியில் கூட வில் ஜாக்ஸ் விரித்த வலையில் எளிதாக விழுந்து 9 ரன்களில் வெளியேறினார். அவர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டார்.

T20 World Cup Final Sunil Gavaskar Urges Gambhir to Drop Abhishek Sharma Rinku Singh Must Play T20 World Cup Final

ரிங்கு சிங் உள்ளே வர வேண்டும்

இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக யாரைக் களமிறக்கலாம் என்பது குறித்தும் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். "அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க வேண்டும். அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்க வேண்டும்.

ரிங்கு சிங் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது உடலில் 'கடவுளின் திட்டம்' (God's Plan) என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவரைப் போன்ற வீரர்களுக்குச் சில நேரங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இறுதிப் போட்டி போன்ற பெரிய களத்திற்கு ரிங்கு சிங் தான் சரியான தேர்வு" என்று கவாஸ்கர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

வருண் சக்கரவர்த்திக்கு பதில் குல்தீப்

பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டும் என கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். அரையிறுதியில் 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாகக் குல்தீப் யாதவைச் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

"வருண் சக்கரவர்த்தியின் தன்னம்பிக்கை உடைந்துவிட்டது போல் தெரிகிறது. சூப்பர் 8 சுற்றுக்குப் பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக அவர் திணறி வருகிறார். அகமதாபாத் மைதானத்தின் எல்லைகள் பெரியது. அங்கு குல்தீப் யாதவ் பந்துவீசுவது அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். தட்டையான ஆடுகளங்களிலும் பந்தைத் திருப்பும் வல்லமை குல்தீப்பிற்கு உண்டு," என்று கவாஸ்கர் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Sunday, March 8, 2026, 9:06 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+