மும்பை : உலகின் சிறந்த கிரிக்கெட் அணி என்றால் பலரும் ஆஸ்திரேலியாவை கூறுவார்கள். அதன் பிறகு பலம் வாய்ந்த திறமையான வீரர்கள் உள்ள அணி என்றால் அனைவரும் தென்னாப்பிரிக்காவை தான் சொல்வார்கள்.
இப்படிப்பட்ட தென்னாப்பிரிக்க அணி பல்வேறு ஆண்டுகளாக ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை. குறிப்பாக தற்போது தான் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி திறமை வாய்ந்த அணியாக இருந்தாலும் அவர்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் கிடையாது. பல்வேறு தொடர்களில் மழையால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மழைப்பொழிவு இருந்தால் தென்னாப்பிரிக்காவுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் கிடையாது. இப்படி 1992 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரிலிருந்து இந்த சாபம் அவர்களுக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தான் இந்த சாபத்திற்கு மோட்சம் கிடைத்திருக்கிறது. இது குறித்து தற்போது பார்க்கலாம். முதல் முறையாக 1992 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்தது. அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய போது 13 பந்துக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது ஒரு பந்துக்கு 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற டக்வொர்த் லூயிஸ் விதியால் இலக்கு மாற்றப்பட்டது. இதேபோன்று 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இலங்கை அணிகள் பலப் பரிசை நடத்தியது. இதில் கடைசி கட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு தென்ஆப்பிரிக்கா செல்லலாம் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 45 ஓவர்களில் 229 ரன்கள் அடிக்க வேண்டும் என முதலில் கூறப்பட்டது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணி 1 ரன் பின்தங்கி இருப்பதாக டக்வொர்த் லூயிஸ் விதி கூறியது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இதுபோன்று 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறிக்கிட்டு ஆட்டத்தையும் மாற்றியது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்படி மழையாலும் தொடர்ந்து முக்கியமான ஆட்டத்தில் சொதப்புவதன் மூலமாகவும் தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வந்தது.
அவ்வளவு ஏன் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யாருமே எதிர்பாராத வகையில் கொல்கத்தாவில் மழை மேகங்கள் சூழ்ந்தது. இதனால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.
இதில் வழக்கம் போல் மழை குறுக்கிட்டதால் தென்னாப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஒரு முறை ஆப்பு உறுதி எனி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் முறையாக மழையால் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாற 17 ஓவரில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் தென்னாபிரிக்க அணி போராடி ஏழு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் முதன்முறையாக மழையால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனால் இம்முறை தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.