Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தவரை பயிற்சியாளராக நியமித்த இலங்கை அணி.. ஜெயசூர்யா விலகல்

கொழும்பு: இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகத் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், சொந்த மண்ணிலேயே இலங்கை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி முன்கூட்டியே வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தனது பதவியிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்தே தற்போது கேரி கிர்ஸ்டன் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

58 வயதான கேரி கிர்ஸ்டன் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இலங்கை அணியின் அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார். "2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமிபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக இலங்கை அணியைத் தயார்படுத்துவதே கேரி கிர்ஸ்டனின் முக்கியப் பணியாக இருக்கும்" என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை அணியின் தேசிய உயர் செயல்திறன் மையத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

T20 World Cup Gary Kirsten Appointed as Sri Lanka Head Coach Following Sanat Jayasuriya s Resignation

பாகிஸ்தானில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமிபியா அணிக்கு ஆலோசகராக கேரி கிர்ஸ்டன் செயல்பட்டார். அதற்கு முன்பாக, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பயணம் வெறும் ஆறு மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது.

2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது. அந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை என்றும், வீரர்கள் மத்தியில் போதிய உடற்தகுதி இல்லை என்றும் கிர்ஸ்டன் கடுமையாக விமர்சித்தார்.

"எனது பயிற்சி காலத்தில் இவ்வளவு பிரிந்து கிடக்கும் ஒரு அணியை நான் பார்த்ததே இல்லை" என்று அவர் வெளிப்படையாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பயிற்சியாளர்களிடமிருந்த அணித் தேர்வுக்குழு அதிகாரத்தைப் பறித்ததையடுத்து, விரக்தியடைந்த கிர்ஸ்டன் அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்.

இந்தியாவுக்குக் கோப்பை வென்று கொடுத்தவர்

பாகிஸ்தானில் கசப்பான அனுபவத்தைச் சந்தித்தாலும், உலக கிரிக்கெட் அரங்கில் இன்றும் மிகச் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக கேரி கிர்ஸ்டன் மதிக்கப்படுகிறார். 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அவர், 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.

பின்னர் 2011 முதல் 2013 வரை தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்து, அந்த அணியை அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசையில் முதலிடத்திற்குக் கொண்டு சென்றார். அவரது இந்தச் சிறப்பான அனுபவம் இலங்கை அணிக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, March 10, 2026, 8:05 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+