டெல்லி: "துணை கேப்டனையே தூக்கிட்டீங்க.. என்ன காரணம்?" என்று நிருபர்கள் துரத்தி துரத்தி கேள்வி கேட்டபோதும், ஒரு வார்த்தை கூட பேசாமல், முகத்தை இறுக வைத்துக்கொண்டு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் காரில் ஏறிச் சென்ற சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், பயிற்சியாளர் கம்பீரின் இந்த மௌனம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய கையோடு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நேற்று (சனிக்கிழமை) தனது சொந்த ஊரான டெல்லிக்குத் திரும்பினார். மும்பையில் நடந்த அணித் தேர்வுக் கூட்டத்தில் கம்பீர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தை விட்டு கம்பீர் வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். "சுப்மன் கில் ஏன் உலகக்கோப்பை அணியில் இல்லை? இது யாருடைய முடிவு?" என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், கம்பீர் யாருக்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. செக்யூரிட்டிகள் உதவியுடன் கூட்டத்தை விலக்கிவிட்டு, நேராகச் சென்று தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் கம்பீர், இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த கூட்டத்தில் அஜித் அகர்கர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தான் கில்லை நீக்கும் முடிவை எடுத்துள்ளனர். ஒருவேளை இந்த முடிவில் கம்பீருக்கு உடன்பாடு இல்லையா அல்லது பிசிசிஐ எடுத்த முடிவில் தான் எதுவும் பேச விரும்பவில்லையா என்று தெரியவில்லை.
இதற்கிடையில், கில் நீக்கம் குறித்து மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளனர். அகர்கர் கூறுகையில், "கில்லின் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணியின் சமநிலை (Team Combination) தான் முக்கியம். எங்களுக்கு டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்பட்டார். அதனால் தான் இந்த முடிவு" என்றார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "இது ஃபார்ம் பற்றிய பிரச்சனை இல்லை. கில் ஒரு சிறந்த வீரர். ஆனால் உலகக்கோப்பைக்குத் தேவையான அணிச் சமநிலைக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.
எது எப்படியோ, வருங்கால கேப்டன் என்று சொல்லப்பட்ட சுப்மன் கில், இப்போது அணியிலேயே இல்லை என்பது தான் நிதர்சனம். இது கம்பீரின் விருப்பத்துடன் நடந்ததா? அல்லது அவர் விருப்பதை மீறி பிசிசிஐ அதிகாரிகள் தலையீட்டால் நடந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.