பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெல்லும் சூழல் உருவானது. இருப்பினும், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஆடிய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை பார்படாஸில் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா சூப்பர் வெற்றியைப் பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 176 ரன்களை எடுத்தது. கோலி, அக்சர் தவிர யாரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை.

அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா: இந்த போட்டியில், அவ்வப்போது தென்னாப்பிரிக்கா விக்கெட் இழந்தாலும், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியை குறைக்கவில்லை. இதனால் தேவைப்படும் ரன் ரேட் பெரியளவில் உயராமல் பார்த்துக் கொண்டது.
கடைசி 7 ஓவரில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. 14ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசிய நிலையில், அதில் ஒரு சிக்ஸர், ஒரு பவுன்டரிஎன 14 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்தது. கடைசி 6 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 சிக்சர், 2 பவுன்டரியை கிளாசென் விளாசினார். இந்த ஓவரில் மொத்தமாக 24 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்தது. இந்த ஓவரில் தான் ஆட்டம் மெல்லா இந்தியா கையை விட்டு செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கியது.
ரொம்ப கம்மி: ஆட்டத்தின் போது எந்த டீம் வெல்வார்கள் என்பதை Win Predictorஇல் காட்டுவார்கள். இந்த 15ஆவது ஓவருக்கு பிறகு இந்தியா வெல்ல வெறும் 3.35% மட்டுமே சான்ஸ் இருந்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. ஏனென்றால் அப்போது தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்த ஓவரை பும்ரா வீசிய நிலையில், தில் அவர் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்து 17ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிய போது முதல் பந்திலேயே கிளாசென் அவுட் ஆனார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.
அதன் பின்னரும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு வெறும் 9.31%ஆக மட்டுமே இருந்தது. இந்த நேரத்தில் வேறு எந்த அணியாக இருந்தாலும் நம்பிக்கை இழந்து இருப்பார்கள். ஏனென்றால் டி20 போட்டிகளில் 18 பந்துகளில் 22 ரன்கள் என்பது மிக மிக எளிதாக எட்டக்கூடிய இலக்கு தான். அப்போது தென்னாப்பிரிக்கா கைவசம் 5 விக்கெட்கள் இருந்தது. குறிப்பாக மில்லரும் களத்தில் இருந்தார்.
மாறிய கேம்: இருப்பினும் நம்பிக்கை இழக்காத இந்தியா மிகச் சிறப்பாக ஆடியது. 18ஆவது ஓவரை வீசிய பும்ரா வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 18வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே மில்லர் வீழ்ந்தார். இதில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்த தொடரின் சிறந்த கேட்ச் என்றே கூறலாம். அந்த ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே ஹர்திக் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது.
Win Predictorஇல் இந்தியா வெல்ல 4% கூட வாய்ப்பு இல்லாத நிலையில், வேற லெவலில் விளையாடிய இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையே முக்கிய காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.