Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியாவுக்கு ஒரு நியாயம், வங்கதேசத்துக்கு ஒரு நியாயமா என்று கேட்டால் திட்டுகிறார்கள்” - கில்லஸ்பி

சிட்னி: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி சமூக வலைத்தளத்தில் எழுப்பிய கேள்வியும், பின்னர் அதை நீக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

வங்கதேச அணி தொடரில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியானதும், ஜேசன் கில்லஸ்பி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் இந்திய அணியின் கடந்த கால முடிவைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.

T20 World Cup Jason Gillespie on Bangladesh s T20 World Cup Exit

"சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காகப் பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்தது. அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது வங்கதேசம் இந்தியா வர மறுக்கும்போது மட்டும் ஏன் அவர்களுக்கு வேறு இடத்தில் போட்டியை நடத்த ஐசிசி சம்மதிக்கவில்லை? இது எனக்குப் புரியவில்லை" என்று அவர் பதிவிட்டிருந்தார். சில உலகக்கோப்பை போட்டிகள் இலங்கையில் நடக்கும் நிலையில் அங்கு வங்கதேசத்தின் போட்டிகளை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

திடீரென நீக்கப்பட்ட பதிவு

கில்லஸ்பியின் இந்தப் பதிவு இணையத்தில் பரவிய சிறிது நேரத்திலேயே, அவர் அதைத் தனது பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். அவர் ஏன் தனது கருத்தை வாபஸ் பெற்றார் என்று ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இது குறித்து ஜேசன் கில்லஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நான் ஒரு சாதாரண கேள்வியைத்தான் கேட்டேன். ஆனால் அதற்காக இணையத்தில் பலர் என்னைக் கடுமையாக விமர்சித்தனர். தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்த்தனர். தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் வந்ததால் தான் அந்தப் பதிவை நான் நீக்கினேன்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஒரு சந்தேகத்தைக் கேட்டதற்காக, முன்னாள் வீரர் ஒருவர் இணையவாசிகள் மூலம் விமர்சிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியா - வங்கதேசம் இடையேயான அரசியல் காரணம் இருந்தாலும், வெறும் விளையாட்டு சார்ந்து பார்க்கும் போது இந்திய அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டதைப் போன்ற தோற்றமும் உள்ளது என்பதே கில்லஸ்பியின் வாதமாக உள்ளது.

ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு

இதற்கிடையில், வங்கதேசத்திற்குப் பதிலாக உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, பி குரூப்பில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7ஆம் தேதி கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் மோதுகிறது.

Story first published: Monday, January 26, 2026, 9:34 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+