வரலாறு படைத்த பாபர்.. உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாக். மாபெரும் வெற்றி!
அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

டாஸ் தோல்வி
இந்திய அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட்டும், கே.எல்.ராகுல் 3 ரன்னுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி நிதானமாக விளையாடினாலும், அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் ஹசன் அலி பந்துவீச்சில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி பவர் ப்ளேவுக்குள் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

முக்கிய பார்ட்னர்ஷிப்
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரிஷப் பண்ட் ஜோடி இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெளியேறினார். இதனால் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்ட விராட் கோலி 57 ரன்கள் குவித்து உதவினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் பேட்டிங்
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு படு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் விக்கெட்டே கிடைக்காமல் இந்திய பவுலர்கள் திணறினர்.

வெற்றி
இந்திய அணியின் முக்கிய பவுலர்களாக பார்க்கப்படும் புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா என அனைவரின் ஓவர்களையும் நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் 17.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 55 பந்துகளை சந்தித்த முகமது ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 52 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து அசத்தினர். இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற வரலாறு இருந்தது. ஆனால் இந்த வெற்றியின் மூலம் அந்த வரலாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications