மும்பை: டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் வீசிய பந்துவீச்சு முறை, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தானை குரூப் ஏ பிரிவில் முதலிடத்திற்குக் கொண்டு சென்றார். இருப்பினும், போட்டியின் வெற்றியைக் காட்டிலும், அவரது பந்துவீச்சு முறைதான் பேசுபொருளானது.
கொழும்பில் நடந்த டி20 உலகக் கோப்பை மோதலின்போது, தாரிக்கின் பந்துவீச்சு 'விதிமுறைக்கு எதிராக பந்தை எறிவதாக குற்றச்சாட்டுகளுடன் எழுந்துள்ளன. இது குறித்து முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா ஆகிய மூவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள கோஸ்வாமி, "கால்பந்து போட்டிகளில் கூட பெனால்டி அடிக்கும்போது வீரர்கள் இடைநிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை. இது எப்படிச் சரியாகும்?" என்று பதிவிட்டார். மேலும், "பந்துவீச்சு சரிதான். ஆனால் அதை ஒரு விநாடி நிறுடததுவது சரியா? இது தொடர்ந்து அனுமதிக்கப்படாது" என்றும் வலுயுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்துள்ள அஸ்வின், "கால்பந்தில் இடைநிறுத்தம் அனுமதிக்கப்படாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு பேட்டர் நடுவருக்கோ அல்லது பந்துவீச்சாளருக்கோ தெரிவிக்காமல் ஸ்விட்ச்-ஹிட் அடிக்கவோ அல்லது ரிவர்ஸ் விளையாடவோ அனுமதிக்கும்போது, பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடுகள்?" என்று அஷ்வின் கேள்வி எழுப்பினார்.
"உண்மையில், பந்துவீச்சாளர் நடுவருக்குத் தெரிவிக்காமல் தனது பந்துவீசும் கையை மாற்ற முடியாது. முதலில் அந்த விதியை மாற்ற வேண்டும்" என்றார். பின்னர் ஆகாஷ் சோப்ரா இந்த விவாதத்தில் இணைந்தார். ஒரு விநாடி நிறுத்தி பந்தை வீசுவது "முற்றிலும் சரியானது. ஆனால், எந்த உத்வேகமும் இல்லாமல், கையை வளைக்காமல், ஒரு சில பந்துகளில் உங்கள் வேகத்தை 20-25 கி.மீ/மணி அதிகரிக்க முடியுமா?" என்று அவர் வினவினார்.உஸ்மான் தாரிக் ஏற்கனவே ஐசிசி-யால் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கை வளைவு 15 டிகிரி என்ற வரம்புக்குள் உள்ளது. தனது இயற்கையாகவே வளைந்த கையை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.