T20 World Cup: கடைசி ஓவர்னு கூட பார்க்கலை.. சுயநலமாக ஆடிய பாகிஸ்தான் வீரர்.. விளாசித் தள்ளிய பதான்
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சதா ஃபர்ஹான் சதம் அடித்து சாதனை படைத்தாலும், கடைசி ஓவரில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அணியின் ஸ்கோரை உயர்த்துவதை விட, தனது சதத்தை நிறைவு செய்வதிலேயே அவர் குறியாக இருந்ததாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கடுமையாகச் சாடியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில், நமீபியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இருந்தது அந்த அணி. இந்த சூழலில், சாஹிப்சதா ஃபர்ஹான் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்.

அதிரடியாக விளையாடிய அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அகமது சேஷாத்திற்குப் பிறகு உலகக்கோப்பையில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
கடைசி ஓவரில் சர்ச்சை
ஆட்டத்தின் 20வது ஓவர் வீசப்பட்டபோது, ஃபர்ஹான் 99 ரன்களில் இருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மிகவும் நிதானமாகப் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்து தனது சதத்தை நிறைவு செய்தார்.
அதுமட்டுமின்றி, கடைசிப் பந்து வைடு லைனில் சென்றபோது, அதை அடிக்க முயற்சிக்காமல் விட்டுவிட்டார். கடைசி ஓவரில் இப்படித் தற்காப்பு ஆட்டம் ஆடியது கிரிக்கெட் வர்ணனையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இர்பான் பதான் விமர்சனம்
வர்ணனையில் இருந்த இர்பான் பதான், ஃபர்ஹானின் இந்தச் செயலால் கடுப்பானார். "அவர் சதம் அடித்தது மகிழ்ச்சிதான். ஆனால் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுப்பதற்காகத் தற்காப்பு ஆட்டம் ஆடுவதா? இது நம்பமுடியாததாக இருக்கிறது. கடைசி பந்தையும் அவர் அடிக்காமல் விட்டுவிட்டார். இது என்ன விசித்திரம்?" என்று கேள்வி எழுப்பினார்.
"தனிப்பட்ட சாதனையை விட அணிக்கு அதிக ரன்கள் சேர்ப்பதே முக்கியம். கடைசி நேரத்தில் இப்படி சுயநலமாக விளையாடக்கூடாது. ஷதாப் கான் அடித்த அந்த இரண்டு சிக்ஸர்கள் இல்லை என்றால் பாகிஸ்தான் ஸ்கோர் 199 ரன்களைத் தொட்டிருக்காது" என்றும் பதான் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் வெற்றி
ஃபர்ஹானின் சதம் மற்றும் ஷதாப் கானின் அதிவேக 35 ரன்கள் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில், நமீபியா அணியை 97 ரன்களுக்கு சுருட்டி 102 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பெரிய வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications