T20 WC: “அவருக்கு 23 வயசா? அப்போ எனக்கு 30 வயசு தான்”.. லைவ் ஷோவில் கலாய்த்த ஷாகித் அப்ரிடி!
லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. அணியின் இந்தத் தோல்வி குறித்துப் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் வீரர் ஒருவரின் வயதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து கேலி செய்து பதிலளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை தோல்வி குறித்த விவாதம்
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி கலந்து கொண்டார். அப்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக இர்ஃபான் நியாசி என்ற வீரரைப் பற்றிப் பேச்சு எழுந்தது.

அப்ரிடி பேசுகையில், "இர்ஃபான் நியாசிக்கு ஏற்கனவே கடந்த காலங்களில் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடக்கூடியவர். அந்தப் பையன் உடற்தகுதியுடன் இருக்கிறார். அவருக்கு இப்போது என்ன வயது இருக்கும்?" என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.
வயதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்ரிடி
அப்ரிடியின் கேள்விக்குப் பதிலளித்தத் தொகுப்பாளர், "இர்ஃபான் நியாசிக்கு அதிகாரப்பூர்வமாக 23 வயதுதான் ஆகிறது" என்று கூறினார். இதைக் கேட்டதும் ஷாகித் அப்ரிடிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதிர்ச்சியுடன், "என்னது? அவருக்கு 23 வயதா?" என்று மீண்டும் கேட்டார்.
தொகுப்பாளர் சிரித்துக்கொண்டே, "ஆம், ஆவணங்களின்படி அவருக்கு 23 வயதுதான்" என்று உறுதிப்படுத்தினார். உடனே அப்ரிடி, "அவருக்கு 23 வயது என்றால், எனக்கு இப்போது 30 அல்லது 35 வயதுதான் இருக்கும்" என்று கேலியாக பதிலளித்தார். கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது உண்மையான வயதை மறைத்து, வயதைக் குறைத்துச் சொல்லி அணியில் இடம் பிடிப்பதை மறைமுகமாகச் சாடும் வகையிலேயே அப்ரிடி இவ்வாறு பேசினார்.
அப்ரிடியின் வயது சர்ச்சை
இதில் வேடிக்கை என்னவென்றால், ஷாகித் அப்ரிடியே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கியவர்தான். அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியபோது அவருக்கு 16 வயது என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தான் ஓய்வு பெற்ற பிறகு எழுதிய 'கேம் சேஞ்சர்' என்ற சுயசரிதை புத்தகத்தில், தான் 1975ஆம் ஆண்டு பிறந்ததாக ஷாஹித் அப்ரிடி குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி பார்த்தால் அவர் அறிமுகமானபோது அவருக்கு 19 அல்லது 21 வயது இருந்திருக்க வேண்டும். இப்படி அவரே வயது குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது இளம் வீரர் ஒருவரின் வயதைக் கேட்டு அவர் கிண்டல் செய்திருப்பது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியமான ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஷாஹித் அப்ரிடி பல முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின் மீண்டும் கிரிக்கெட் ஆடி இருக்கிறார். அதுவும் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications