மும்பை : டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஜோடி t20 உலக கோப்பையை கைப்பற்ற பலமுறை போராடியும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு அது கிடைக்கவில்லை.
இந்த சூழலில் இருவரும் கடைசி ஒரு முறை ஜோடி சேர்ந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள். நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியே தழுவாமல் விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இதுதான் கடைசி டி20 தொடர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், டி20 உலக கோப்பை முடிவடைந்த உடன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்று விடுவார்கள். இது இருவரும் எடுக்கும் முடிவாகவும் இருக்கலாம். தேர்வு குழு எடுக்கப் போகும் முடிவாகவும் இருக்கலாம்.
நிச்சயம் ஐபிஎல் தொடரில் இருவரும் விளையாடுவார்கள். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை கோலி, ரோஹித் என இருவரையும் நாம் கடைசி முறையாக டி20 உலக கோப்பை தொடரில் தான் பார்க்க இருக்கின்றோம். இதேபோன்று விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடிப்பார்.
கோலி இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார். விராட் கோலியின் உடல் தகுதி பிரமாதமாக இருக்கின்றது. அவர் தொடர்ந்து ரன்கள் அடிக்கும் விதத்தை பார்க்கும் போது நிச்சயமாக 100% தாண்டி அடிப்பார் என்று வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு தற்போது 35 வயது ஆகிறது. அவர் இதுவரை 80 சதங்களை சர்வதேச போட்டிகளில் அடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி உலக கோப்பை போட்டியில் சதம் அடித்தார். இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலி கேப்டன் பதவியை மீண்டும் ஏற்க மாட்டார் என்றும் ரிஷப் பண்ட் கே எல் ராகுல் பும்ரா ஆகிய மூன்று வீரர்களின் யாரேனும் ஒருவர் கேப்டனாக வர வாய்ப்பு இருப்பதாகவும் வசீம் ஜாபர் தெரிவித்துள்ளார்.