மும்பை: இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான ரிஷப் பன்ட், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.2018-ல் இந்தியாவுக்காக அறிமுகமான பன்ட், டெஸ்ட் போட்டிகளில் சில அசத்தலான வெற்றிப் பங்களிப்புகளை அளித்துள்ளார். ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த வண்ணமே கிடைத்துள்ளன.
டெஸ்ட் அணியில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளார். கடந்த டி20 உலககோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட உலககோப்பை இந்திய அணியில் பண்ட் இடம்பெறவில்லை. ஒருநாள் அணியில் கூட விக்கெட் கீப்பராக ராகுலுக்கு தான் அணியில் முன்னூரிமை தரப்படுகிறது.

இந்நிலையில், தனது ஆட்ட பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரிஷப் பன்ட் மீது எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர் ஒரு திறமையான வீரர் என்பதால், தனது ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்."
"இப்போது அவரை இளம் வீரர் என்று சொல்ல முடியாது. அவர் 2018 முதல் அணியில் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் விளையாட்டில் மாற்றங்களைச் செய்வது மிகவும் முக்கியம். எதிரணி வீரர்கள் உங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆட்டத்தைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு எதிராகத் திட்டமிடுகிறார்கள்."
"நீங்கள் எங்கு வேகப்பந்து வீச்சை அடிப்பீர்கள், எந்தப் பந்துகளைத் தாக்க மாட்டீர்கள் என்று அனைத்தையும் கவனிக்கிறார்கள். எனவே, நீங்களும் அதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். 'நான் மீண்டும் அதே வழியில் அவுட் ஆனேன்' என்று சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. இதை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்" அமித் மிஷ்ரா சுட்டிக்காட்டினார்.
"ஒரு குறிப்பிட்ட ஷாட் ஒரு பிட்சில் பலனளிக்கவில்லை என்றால், அதை ஆடாதீர்கள். 'இதுதான் என்னுடைய ஆட்டம்' என்று நீங்கள் பிடிவாதம் கொள்ள முடியாது. அப்படி பிடிவாதம் பிடித்தால், இன்னும் நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் மட்டுமே ஆடுவீர்கள், இறுதியில் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இது எல்லா இடங்களிலும் வேலை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது."
"பவுண்டரி, சிக்ஸர்களை மட்டுமே அடிக்கும் ஒரே வகையான விக்கெட் எங்கும் இருக்காது. சில இடங்களில் சுழலுக்கு உதவும் ஆடுகளங்களும், வேறு சில இடங்களில் வேகம் மற்றும் ஸ்விங் பந்துகளுக்குச் சாதகமான ஆடுகளங்களும் இருக்கும். அத்தகைய மாறுபட்ட சூழல்களை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்" என்று கூறினார்.