Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணித் தேர்வில் நடந்த 2 மெகா தவறுகள்.. இந்திய அணியின் தோல்வியை கணித்த முகமது அமீர் பேச்சு

லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது எனவும், இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் உள்ள தவறு என்ன என்பது பற்றியும் பேசி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதனால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது.

T20 World Cup Will India Qualify for the Semifinals Mohammad Amir Critiques India s Strategic Mistakes

இந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என்று தான் முன்பு கூறிய கருத்தில் தற்போதும் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகத்தில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் இது குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

கருத்துகளை மதிக்க வேண்டும்

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ள நிலையில், உங்களின் கணிப்பு சரியாக அமைந்துள்ளதே என்ற கேள்விக்கு முகமது அமீர் பதிலளித்தார். அவர் கூறுகையில், "என்னுடைய கிரிக்கெட் அறிவுக்கு உட்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டத்தை வைத்து நான் அந்த கருத்தை கூறினேன். ஒவ்வொருவரின் கருத்தும் மாறுபடும், அதை நாம் மதிக்க வேண்டும்.

நேற்றைய போட்டியைப் பார்த்தால் தென்னாப்பிரிக்கா மிகச் சிறந்த அணியாக உள்ளது. அவர்களை சாதாரணமாக எடைபோட முடியாது. 2024 உலகக் கோப்பையில் இருந்து அவர்கள் விளையாடும் விதத்தைப் பார்த்தால், மிகவும் ஆபத்தான அணியாகத் திகழ்கிறார்கள். அதற்கான அங்கீகாரத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்" என்று கூறினார்.

எதிர்வினை ஆற்றுவதில்லை

முன்னதாக, குரூப் 1 பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளே அரையிறுதிக்கு செல்லும் என்றும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி செல்லாது என்றும் அமீர் கூறிய கருத்துக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்துப் பேசிய அவர், "என்னுடைய கருத்து பலருக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவர்களும் பாகிஸ்தான் அணி குறித்து பல கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதுபோன்று எதிர்வினையாற்றுவதில்லை. கிரிக்கெட் பற்றிப் பேசும்போது, மற்றவர்களின் கிரிக்கெட் சார்ந்த கருத்துகளை மதிக்க வேண்டும். நன்றாக விளையாடும் அணிதான் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இந்தியா செய்த தவறுகள்

இந்திய அணி செய்த தவறுகள் குறித்தும் அமீர் சுட்டிக்காட்டினார். "இந்திய அணியின் ஆடும் லெவன் தேர்வை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் சிறந்த மேட்ச் வின்னரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்காமல் வெளியே அமர வைத்துள்ளனர். இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது ஒரு பலமாகும். அதேபோல தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்ட துணை கேப்டன் அக்சர் படேலையும் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை. இந்திய அணி தங்களுக்குத் தாங்களே தவறுகளைச் செய்து கொள்கிறது" என்று விமர்சித்தார்.

பேட்டிங் சரிவு

மேலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்தும் அவர் பேசினார். "இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் தடுமாறி வருகிறது. சிறிய அணிகளுக்கு எதிராகவும் அவர்களின் பேட்டிங் வரிசை சரிந்துவிடுகிறது. கிரிக்கெட்டில் சிறிய அணி, பெரிய அணி என்ற வேறுபாடு இல்லை என்றாலும், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராகக்கூட இந்திய பேட்டிங் வரிசை சரிவைச் சந்தித்ததை நாம் பார்த்தோம்" என்று முகமது அமீர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 25, 2026, 9:48 [IST]
Other articles published on Feb 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+