மும்பை: 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. சுப்மன் கில் நீக்கத்தால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது மிகவும் துரதிஷ்டவசமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கு முன்பு அணியில் இருந்ததால் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக ஆசிய கோப்பை தொடரின் போது கேப்டன் சூரிய குமாரியாதவும் கூறியதை சுட்டிக்காட்டிய ஆகாஷ் சோப்ரா, அப்படி பார்த்தால் கில்லைவிட ஜெய்ஸ்வாலுக்கு தான் முன்னுரிமை வழங்கி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து தனது youtube சேனலில் பேசிய அவர், "ஜெய்ஸ்வால் விளையாடும் விதத்தை பார்த்தால் நியாயமாக அவர்தான் அணியில் முதலில் இடம் பெற்று இருக்க வேண்டும். ஏனென்றால் கில்லை விட அவர்தான் 2024 டி20 உலக கோப்பையில் முக்கிய இடத்தில் இருந்தார். ஆனால் அந்த அணியில் அவருக்கு இடம் தரப்படவில்லை. ஏன் என்றால் அவருக்கான இடம் அணியில் அப்போது இல்லை."
"அந்த தொடருக்கு முன்பு கூட டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்திருந்தார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த ஆறு இந்திய வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதன் பிறகு நிறைய டெஸ்ட் போட்டிகள் நடந்தது. இதன் காரணமாக தான் ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை."
"இதன் காரணமாக தான் இடைப்பட்ட காலத்தில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சனை தொடக்க வீரர்களாக தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். இருவரும் நன்றாக விளையாடியதால், திடீரென்று ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லாமல் போனது. அதன் பிறகு கில் திடீரென்று தொடக்க வீரராக வந்தார்."
"அது மட்டுமில்லாமல் அவரை துணை கேப்டனாக அறிவித்தார்கள். இதன் மூலம் இந்திய அணியிலிருந்து அவர் நீக்க முடியாத நபராக மாறிவிட்டார். நான் தேர்வு செய்த ஆசிய கோப்பை அணியில் ஜெய்ஸ்வாலுக்கு முக்கிய இடம் இருந்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் நடந்து முடிந்த கதையாக மாறிவிட்டது. இப்போது கில் அணியில் இல்லை."
" நியாயப்படி பார்த்தால் ஜெய்ஸ்வால்தான் அணிக்கு மாற்று வீரராக வந்திருக்க வேண்டும். ஆனால் அவரும் தேர்வு குழுவினரால் மறக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்திருந்தாலும் சஞ்சு சாம்சன் தான் தொடக்க வீரராக இருந்திருப்பார். ஏனென்றால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உங்களுக்கு வேண்டும்."
"சஞ்சு சாம்சனுக்கு ஏதேனும் காய்ச்சல் இல்லை காயம் ஏற்பட்டால் கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியின் இருக்க வேண்டும் அல்லவா! அதற்காகத்தான் இசான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எனவே ஜெய்ஸ்வால் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்."
"இந்த ஐபிஎல் என்பது ஜெயஷ்வாலுக்கு மிகவும் முக்கியம்" என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 22 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் 723 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 164 ஆகும். இதே போன்று ஐபிஎல் போட்டிகளில் 67 ஆட்டங்களில் மொத்தமாக 216 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 152 ஆகும்.