நான்கே ஓவரில் 62 ரன்கள்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.. இறுதிப்போட்டிக்கு கெத்தாக தகுதி
அமீரகம்: யாராலும் அசைக்க முடியாமல் இருந்த பாகிஸ்தான் அணியை சுளுக்கெடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 2வது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த களத்தில் டாஸ் வெல்லும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு என்பதால் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்தது.

வழக்கமான தொடக்கம்
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம் போல் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். 34 பந்துகளை சந்தித்த பாபர் அசாம் 39 ரன்களை விளாசினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 71 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகார் சமான் - முகமது ரிஸ்வானுடன் சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தார். இதனால் 15 ஓவர்களில் அந்த அணி 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

சவாலான இலக்கு
ஓரளவிற்கு அதிரடி காட்டப்படும் என்ற சூழல் உருவானபோது 67 ரன்களுக்கு ரிஸ்வான் அவுட்டானார். இதனால் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி சிக்கியது. அந்த குறையை தீர்த்து வைத்தார் ஃபகார் சமான். 32 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 55 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. கடைசி 24 பந்துகளில் மட்டும் அந்த அணி 56 ரன்கள் சேர்த்தது.

தடுமாறிய ஆஸ்திரேலியா
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஆரோன் ஃபின்ச் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் (28), ஸ்டீவ் ஸ்மித (5), க்ளென் மேக்ஸ்வெல் (7) அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுணையில் தூண் போன்று நின்ற டேவிட் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அவுட்டானார். இதனால் 96 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

திடீரென ட்விஸ்ட்
அந்த அணி வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூவ் வேட் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 31 பந்துகளை சந்தித்த ஸ்டோய்னிஸ் 40 ரன்களும், 17 பந்துகளை சந்தித்த மேத்யூவ் வேட் 41 ரன்களும் விளாசினர். இதனால் 19 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications