T20WorldCup India Squad: புறக்கணிக்கப்பட்ட டி.நடராஜனுக்கு.. திறமை இருந்து வாய்ப்பில்லை.. காரணம் என்ன
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் டி.நடராஜன் இணைக்கப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், அதற்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஆகியோர் உள்ளனர். இதே போல ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை ராகுல் சஹார், அஸ்வின், அக்ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளனர்.

நடராஜன் இல்லை
இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் யார்க்கர் கிங் எனப்படும் நட்சத்திர பவுலர் டி.நடராஜன் சேர்க்கப்படாதது பெரும் பேசுபொருளாகியுள்ளது. நடராஜன் காயத்தில் இருந்து முழுவதுமாக மீளாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

காரணம்
2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய டி.நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் தனது திறமையை நிரூபித்தார். இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என்று பலரும் கூறி வந்த நிலையில் திடீரென முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் 2 போட்டிகளுடன் வெளியேறினார். பின்னர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நடராஜன், நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.

மீண்டும் பயிற்சி
தற்போது அவர், பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தன்னுடைய பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் எப்படியும் பங்கேற்பார் என கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல்-ல் சிறப்பாக சோபித்தாலும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜொலிக்கும் வாய்ப்பு போயுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications