கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி.. டி20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்? - விவரம்!
லண்டன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஒருவர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதலில் நடக்கவிருந்த உலகக்கோப்பை தொடர் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடருக்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அட்டவணை
டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடத்தப்பட உள்ளது. அதில் தேர்வு செய்யப்படும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அந்த போட்டிகள் முழுவதும் அமீரகத்தில் உள்ள சார்ஜா, அபுதாபி, துபாய் நகரங்களில் நடக்கவிருக்கிறது.

அணி அறிவிப்பு
இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அனைத்து அணிகளும் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியையே அறிவித்துவிட்டது. மற்ற கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை ஓரளவிற்கு தேர்வு செய்துவிட்டது. விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ பொறுத்தவரை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரர் விலகல்
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஒருவர் விலகியுள்ளார். அது வேறு யாரும் அல்ல, இங்கிலாந்தின் அதிரடி நாயகன் பென் ஸ்டோக்ஸ் தான். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது டி20 உலகக்கோப்பை அணியை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளது. இதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பென் ஸ்டோக்ஸின் பெயர் இடம் பெறாது எனத்தெரிகிறது.

காரணம் என்ன
இங்கிலாந்து டி20 அணியில் முக்கிய வீரராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற விடுப்பு எடுத்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறிது ஓய்வு தேவைப்படுவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு மேலும் சில மாதம் ஓய்வு தேவை என் அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு இக்கட்டான சூழலில் உதவியவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications