தமிழக வீரர் சாய் கிஷோர் இங்கிலாந்து உள்ளூர் தொடரில் விளையாட முடிவு.. கவுண்டி அணியுடன் ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் கவுண்டி கிரிக்கெட் அணியுடன் ஆறு போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பும் கிடைக்காத நிலையில் சாய் கிஷோர் இங்கிலாந்து உள்ளூர் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காகச் சாய் கிஷோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 20 முதல் வொர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள போட்டியில் அவர் முதன்முறையாகக் குளோஸ்டர்ஷையர் அணிக்காகக் களம் இறங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து டெர்பிஷையர், மிடில்செக்ஸ், டர்ஹாம், லங்காஷையர் மற்றும் கென்ட் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் அவர் விளையாடவுள்ளார்.

இந்த வாய்ப்பு குறித்துப் பேசிய சாய் கிஷோர், "குளோஸ்டர்ஷையர் அணியிக்காக விளையாடக் கிடைத்த வாய்ப்பை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இங்கிலாந்து தட்பவெப்ப நிலைகளில் எனது பந்துவீச்சுத் திறமையைச் சோதித்துப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் ஜான் லூயிஸ் கூறுகையில், "அனுபவம் வாய்ந்த சாய் கிஷோரின் வருகை எங்கள் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து பிட்ச்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அவரது பங்களிப்பு முக்கியமானது" என்றார்.
சுமார் 6 அடி 3 அங்குல உயரமுள்ள சாய் கிஷோர், உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி 54 முதல்தரப் போட்டிகளில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் 11 முறை 4 விக்கெட்டுகளையும், 14 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்காக 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் கிஷோர், 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2025 சீசனில் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக விளையாடிய சாய் கிஷோர், டர்ஹாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமக்குத் தொடர்ந்து போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஐபிஎல் அணிக்கு மாற விரும்புவதாகப் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

