புனே: விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணியின் சாய் சுதர்சன் ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பின் டிஎன்பிஎல், இந்தியா ஏ, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் என்று சாய் சுதர்சனின் பேட்டிங் ஃபார்ம் உச்சத்திற்கு சென்றது. இதனால் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் குரூப் ஈ பிரிவில் தமிழ்நாடு அணி இடம்பெற்றுள்ளது. இன்று கோவா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவா அணி கேப்டன் தர்ஷன் மிஷல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அணி சார்பாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெகதீசன் 2 ரன்களிலும், தொடர்ந்து வந்த சாய் கிஷோர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வந்த அபாரஜித் உடன் இணைந்து சாய் சுதர்சன் தமிழ்நாடு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அபாரஜித் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிரப்பாக ஆடிய சாய் சுதர்சன் சதம் விளாசி மிரட்டினார். 144 பந்துகளில் எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி என்று 125 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 20 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 6 சதங்கள், 5 அரைசதங்கள் என்று 71.35 பேட்டிங் சராசரியுடன் 1213 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சன் விரைவில் இந்திய டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.