மும்பை: நாகாலாந்து அணிக்கு எதிரான விஜய் ஹசாரே குரூப் சுற்று போட்டியில் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கேகேஆர் அணிக்காக ஆடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாஹலை தவிர்த்துவிட்டு, வருண் சக்கரவர்த்தியை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்தது. ஆனால் அந்த டி20 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்தி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன்பின் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. அதேபோல் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் வருண் சக்கரவர்த்தியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் கடந்த ஐபிஎல் சீசனில் வருண் சக்கரவர்த்தி தனது ஸ்டைலை மாற்றி, பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்து தரமான கம்பேக்கை நிகழ்த்தினார். இதனால் கேகேஆர் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாகவும் மாறினார்.
இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரிலும் வருண் சக்கரவர்த்தி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று நாகாலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின் தமிழ்நாடு பவுலர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நாகாலாந்து அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
19.4 ஓவர்களில் வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்து நாகாலாந்து அணி ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு ஸ்பின்னரான சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 8 வீரர்கள் 9 ரன்களை கூட கடக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் மட்டும் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி.
இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு வெறும் 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் கிஷோர் 37 ரன்களும், ஜெகதீசன் 30 ரன்களும் விளாசினர். இதன் மூலமாக தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.