மும்பை : ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்கு எதிராக களமிறங்கிய தமிழ்நாடு அணி 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
"45 நிமிடங்கள் ஆடப்பட்ட மோசமான கிரிக்கெட்" என்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது குறித்து கேப்டன் விராட் கோலி பேசிய வார்த்தைகள் இது. கிட்டத்தட்ட தமிழ்நாடு அணிக்கும் ரஞ்சி டிராபி அரையிறுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு அணி ரஞ்சி டிராபி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதிலும் நடப்பு சாம்பியனான செளராஷ்டிரா அணியை வீழ்த்திவிட்டு கெத்தாக அரையிறுதிக்குள் கால் பதித்தது தமிழ்நாடு. இதன் காரணமாக நட்சத்திர வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரும் தமிழ்நாடு அணிக்கு திரும்பினர். அரையிறுதியில் வலிமை வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்ள தமிழ்நாடு அணியும் சிறப்பாக தயாராகியது.
இதையடுத்து டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் 450 ரன்களையாவது தமிழ்நாடு அணி எடுத்தால் மட்டுமே, தார் ரோடு பிட்சான மும்பை மைதானத்தில் தப்பிக்க முடியும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது. மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை வீசினார்.
அந்த ஓவரின் 4வது பந்திலேயே சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து மோகித் அவஸ்தி பந்துவீச்சில் ஜெகதீசன் 4 ரன்களிலும், துஷார் தேஷ்பாண்டே வீசிய ஓவரில் பிரதோஷ் பால் மற்றும் கேப்டன் சாய் கிஷோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அனுபவ வீரர் பாபா இந்திரஜித்தும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 45 நிமிடங்களுக்குள் 42 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் விஜய் சங்கர் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தை நம்பியே தமிழ்நாடு அணி உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதி சுற்றில் ஆடி வரும் தமிழ்நாடு அணி, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அணி வெற்றிபெற வேண்டுமென்றால் அசாத்தியமான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.