சதம் விளாசிய பாபா இந்திரஜித்.. மும்பையை தெறிக்கவிட்ட தமிழ்நாடு.. பட்டையை கிளப்பிய வருண் சக்கரவர்த்தி
ராஜ்கோட்: விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
விஜய் ஹசாரே தொடருக்கான காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 48.3 ஓவர்களில் 227 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. மும்பை அணி தரப்பில் பிரசாத் பவார் 59 ரன்களும், சிவம் துபே 45 ரன்களும் விளாசினர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதேபோல் தமிழ்நாடு அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் அபராஜித் மற்றும் சித்தார்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அணி தரப்பில் அபராஜித் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் இரண்டாவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் - பாபா இந்திரஜித் கூட்டணி இணைந்தது. இதில் சிறப்பாக ஆடிய பாபா அபராஜித் 45 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நிதிஷ் ராஜகோபால் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் தமிழ்நாடு அணி 103 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய நிலையில், தமிழ்நாடு அணி 43.2 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட 103 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் விஜய் சங்கர் 58 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 51 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள முதல் அரையிறுதி சுற்றில் ஹரியானா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கவுள்ளது. இதுவரை தமிழ்நாடு அணி 5 முறை விஜய் ஹசாரே தொடரை 5 முறை கைப்பற்றியுள்ள நிலையில், 6வது முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Story first published: Monday, December 11, 2023, 18:49 [IST]
Other articles published on Dec 11, 2023


Click it and Unblock the Notifications