சேலம் : 6 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ரஞ்சி டிராபி தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு அணி தகுதிபெற்றுள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் முதல் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் இருவரின் அபார சதம் காரணமாக 435 ரன்களை விளாசியது. பஞ்சாப் அணி தரப்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த அஜித் ராம் 6 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
இதில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 19 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், வெறும் 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறுகொடுத்தது. தமிழ்நாடு அணி சார்பாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், அஜித் ராம் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனால் தமிழ்நாடு அணி வெற்றிபெற 71 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அணி சார்பாக லோகேஷ்வர் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக தொடங்கிய இருவரும் பவுண்டரிகள் மூலம் ரன்கள் சேர்க்க தொடங்கினர். லோகேஷ்சர் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழலில், ஜெகதீசன் - பிரதோஷ் இருவரும் 7 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆட்டநாயகனாக தமிழ்நாடு வீரர் இந்திரஜித் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலமாக தமிழ்நாடு அணி 2017-18 ரஞ்சி டிராபி தொடருக்கு பின் முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே சாய் கிஷோர் நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு அணியை அழைத்து சென்றுள்ளார்.