
பாதிக்கப்பட்ட பயிற்சி போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 21ம் தேதி யூஏஇக்கு பயணம் மேற்கொண்ட சிஎஸ்கே அணிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. சில தினங்களிலேயே அதன் இரு வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சி முகாமும் பாதிக்கப்பட்ட சூழலில், மற்ற வீரர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அதன் பயிற்சி போட்டிகள் துவங்கின.

பொறுமையை கைவிடாத தோனி
இதனிடையே, சொந்த காரணங்களால் மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தனர். ஆயினும் தன்னுடைய பொறுமையை சிறிதும் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி போட்டிகளில் பங்கேற்று அதிரடி சிக்சையும் விளாசினார் தோனி. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அணியை வழிநடத்துவார்
இந்நிலையில் சிஎஸ்கே அணி நல்ல பார்மில் உள்ளதாகவும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளை விளையாட சிறப்பாக தயாராகி வருவதாகவும் அணியின் சிஇஓ விஸ்வநாதன் அதன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நெருக்கடியான நேரங்களிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் தலைவன் தோனி, நம்மிடையே உள்ளதாகவும் அவர் அணியை சிறப்பாக கொண்டு செல்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர் கூட்டங்கள்
வீரர்களும் உற்சாகமாக பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வருவதாகவும், ரெகுலராக தாங்கள் ஆன்லைன் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்த விஸ்வநாதன், அவர்களின் சிறப்பான மனநிலைக்கு தேவையானவற்றை தோனி செய்து வருவதாகவும், வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர்கள் ஆவலுடன் உள்ளதாகவும் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











