இந்திய அணியில் இருந்து 2 பந்துவீச்சாளர்கள் நீக்கம்.. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து தொடரில் பின்னடைவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 2026 ஐபிஎல் முடிந்த உடன் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மிக முக்கியமான தொடர்களில் இருந்து இந்திய அணியின் இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தான் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ஆகாஷ் தீப் கடுமையான முதுகுவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். அதேபோல், 2026 டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். இந்த எதிர்பாராத காயங்கள் காரணமாகவே இவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

தற்போது பெங்களூருவில் இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் காயத்தின் தன்மை சற்று தீவிரமாக உள்ளதால், மீண்டும் முழு உடற்தகுதியை எட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர்களுக்கு தசை வலுவாக்கும் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இதன்பிறகு மெல்ல மெல்ல ஓட்டப்பயிற்சி மற்றும் பந்துவீச்சு பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆகாஷ் தீப் குணமடைய ராணாவை விட கூடுதல் காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் துலீப் கோப்பை தொடரில்தான் மீண்டும் களமிறங்குவார்கள் என உறுதியாக தெரிகிறது. கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் ஹர்ஷித் ராணா அனைத்து வடிவிலான போட்டிகளிலும், ஆகாஷ் தீப் டெஸ்ட் போட்டிகளிலும் முக்கிய வீரர்களாக திகழும் நிலையில் இவர்களின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2026:
ஜூன் 6 முதல் 10 வரை: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (சண்டிகர், காலை 9:30)
ஜூன் 14: 1வது ஒருநாள் போட்டி (தர்மசாலா, மதியம் 1:30)
ஜூன் 17: 2வது ஒருநாள் போட்டி (லக்னோ, மதியம் 1:30)
ஜூன் 20: 3வது ஒருநாள் போட்டி (சென்னை, மதியம் 1:30)
இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2026:
ஜூலை 1: 1வது டி20 போட்டி (செஸ்டர் லீ ஸ்ட்ரீட், இரவு 11:00)
ஜூலை 4: 2வது டி20 போட்டி (மான்செஸ்டர், இரவு 7:00)
ஜூலை 7: 3வது டி20 போட்டி (நாட்டிங்ஹாம், இரவு 11:00)
ஜூலை 9: 4வது டி20 போட்டி (பிரிஸ்டல், இரவு 11:00)
ஜூலை 11: 5வது டி20 போட்டி (சவுத்தாம்ப்டன், இரவு 11:00)
ஜூலை 14: 1வது ஒருநாள் போட்டி (பர்மிங்காம், மாலை 5:30)
ஜூலை 16: 2வது ஒருநாள் போட்டி (கார்டிஃப், மாலை 5:30)
ஜூலை 19: 3வது ஒருநாள் போட்டி (லண்டன், மதியம் 3:30)


Click it and Unblock the Notifications