ஐபிஎல் 2020 தொடர்... வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தறது சந்தேகம்தான்... பிசிசிஐ தகவல்
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை யூஏஇயில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி 10ம் தேதிகக்கு ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மொதேரா மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ம் தேதிவரை பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎல் நிர்வாகக்குழு கருதுவதால் நேரிடையாக வீரர்கள் துபாயில் பயிற்சி மேற்கொள்வார்கள் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

செப்டம்பரில் துவக்கம்
கொரேனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டு தற்போது அந்த கால அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் மாற்றம் குறித்து நிர்வாகக்குழு யோசித்து வருகிறது.

பயிற்சி முகாம் நடத்த திட்டம்
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக அவர்களுக்கு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ய ஐபிஎல் நிர்வாகக் குழு திட்டமிட்டு வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ம் தேதிவரை பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவிப்பு
ஆனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில், தற்போது அந்த ரிஸ்கை எடுக்க முடியாது என்று ஐபிஎல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மொதேரா மைதானத்தில் இந்த பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தங்களுக்கு பிசிசிஐயிடம் இருந்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

பயிற்சி முகாமில் ஈடுபடுவார்கள்
வீரர்கள் ஏற்கனவே தங்களது சொந்த ஊர்களில் இருந்து அகமதாபாத் சென்று அங்கிருந்து துபாய் செல்லவுள்ள நிலையில், மேலும் அவர்களது பாதுகாப்பை ரிஸ்க் செய்ய விரும்பவில்லை என்று ஐபிஎல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. துபாய்க்கு சென்று சேர்ந்தவுடன் அங்கு வீரர்கள் உடனடியாக பயிறசிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications