உள்ளே வருகிறாரா ரிஷப் பண்ட்.. கே.எல்.ராகுலின் உண்மையான நிலை என்ன? பயிற்சியாளர் வெளிப்படையாக பேச்சு!
பெர்த்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்படவுள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த் நகரத்தில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும் என ஐசிசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் திவீரமாக தயாராகி வருகின்றன.

இந்திய போட்டி
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்க வேண்டும். ஆனால் கே.எல்.ராகுல் அதற்கு ஒத்துழைப்பாரா? என்பது தான் சந்தேகமாக உள்ளது. பயிற்சி போட்டிகளில் கலக்கிய கே.எல்.ராகுல் முதல் 2 லீக் போட்டிகளிலுமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி சென்றார். குறிப்பாக பாகிஸ்தான் போட்டியில் பதற்றத்தாலேயே அவுட்டானார்.

ராகுல் நீக்கமா?
இதனையடுத்து ஃபார்ம் அவுட்டில் உள்ள கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்-ஐ உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஓப்பனிங்கில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இருப்பதால் அவரை சேர்ப்பதற்காக ரசிகர்கள் கோரினர். எனவே ப்ளேயிங் 11 ஏதாவது மாற்றம் நிகழுமே என்ற எதிர்பார்ப்பும் பெரியளவில் இருந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர். அதில், ராகுலை நீக்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை. 2போட்டிகளில் எதையும் முடிவு செய்யக்கூடாது. அவர் பயிற்சிகளில் மிகச்சிறப்பாக தான் செயல்படுகிறார். எனவே எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே விளையாட தான் விரும்புகிறோம்.

ரிஷப் பண்ட் நிலை
ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அணியில் 11 பேருக்கு தானே வாய்ப்பு தர முடியும். ஆனால் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு வரலாம், தயாராக இருங்கள் என கூறி தான் இருக்கிறோம். எனவே வாய்ப்பு ஏற்படும் போது அவர் களமிறக்கப்படுவார். எந்தவொரு வீரராக இருந்தாலும் சில சமயங்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில் ராகுல் களத்தை பழகிக்கொண்டால் அதிரடி தான் என விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications