இந்திய அணிக்கு நற்செய்தி.. அரையிறுதியில் அடித்த அதிர்ஷ்டம்.. பேட்டிங் & பவுலிங் இனி பிரச்சினை இல்லை!
சிட்னி: இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு நிம்மதி கொடுக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடிலெய்டிற்கு சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ப்ளேயிங் 11 தேர்வு குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணிக்கு நற்செய்தி
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் ஒரு படி அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் வீரரான டேவிட் மாலன் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இலங்கை அணியுடனான லீக் போட்டியின் போது காயமடைந்த அவர், அதன்பின்னர் களத்திற்கே வரவில்லை. தற்போதைக்கு குணமடையமுடியாத சூழலில் தான் இருப்பதாக தெரிகிறது.

மாற்று வீரர் யார்?
அதிரடி வீரர் டேவிட் மாலன் ஒருவேளை குணமடையவில்லை என்றால் இங்கிலாந்துக்கு இருக்கும் ஒரே மாற்று பிலிஃப் சால்ட் மட்டும் தான். அனுபவம் குறைந்த வீரரான இவர் நடப்பு தொடரில் ஒருபோட்டியில் கூட ஆடவில்லை. இதனால் இங்கிலாந்தின் ஓப்பனிங் அதிரடியை கட்டுப்படுத்துவது இந்தியாவுக்கு மிகவும் சுலபமாக அமையும்.

மீண்டும் ஒரு பிரச்சினை
இது ஒருபுறம் இருக்க, தற்போது மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட்-க்கும் உடலில் பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவர் பயிற்சிக்கு கூட வரவில்லை. எனவே நாளை நடைபெறும் போட்டியில் அவரும் கலந்துக்கொள்வாரா என்பது சந்தேகமாக உள்ளது.

அச்சுறுத்தும் பவுலிங்
நடப்பு தொடரில் மார்க் வுட் இதுவரை 4 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி ஆபத்தான பவுலராக இருக்கிறார். இந்திய அணிக்கும் இவர் பவர் ப்ளேவில் அச்சுறுத்தலாக இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந்தின் 2 முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications