கம்பீர் வைத்த 2 அதிரடி கோரிக்கைகள்.. கேப்டன் பதவியில் பிடிவாதம்.. பிசிசிஐ கையில் இறுதி முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பிசிசிஐ-யிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தை 2028 டி20 உலகக்கோப்பை வரை நீட்டிக்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் கண்டாலும், சூர்யகுமார் யாதவ் தான் டி20 அணியின் கேப்டன் பதவிக்கு தனது முதல் தேர்வு என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
கடந்த 2026-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை கௌதம் கம்பீர் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இந்தியாவுக்கு வென்று கொடுத்தது. தற்போது கம்பீரின் பயிற்சியாளர் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை உள்ளது. ஆனால், 2028-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை இந்திய அணியை வழிநடத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கேப்டன் மீது நம்பிக்கை
35 வயதான சூர்யகுமார் யாதவ், உலகக்கோப்பை தொடரில் 242 ரன்கள் சேர்த்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அடித்த 84 ரன்களுக்கு பிறகு பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 18, 18, 11 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். தற்போதைய 2026 ஐபிஎல் தொடரிலும் 4 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இருப்பினும், கம்பீர் சூர்யகுமார் யாதவ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அணியை வழிநடத்துவதில் அவர் காட்டும் நிதானமும், வீரர்களை ஒருங்கிணைக்கும் விதமும் கம்பீருக்குப் பிடித்துள்ளது. இதனால் 2028 வரை அவரே கேப்டனாக நீடிக்க வேண்டும் என கம்பீர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ-யின் திட்டம்
ஆனால், பிசிசிஐ மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் சூர்யகுமாரின் வயது குறித்து யோசனையில் உள்ளனர். 2028 ஒலிம்பிக் மற்றும் உலகக்கோப்பையின் போது சூர்யகுமாருக்கு 38 வயதாகும். இந்த வயதில் அவர் தனது பழைய அதிரடியைத் தொடர்வாரா என்பது கேள்விக் குறியாக உள்ளது. குறிப்பாக 2025-ம் ஆண்டு முழுவதும் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சூர்யா தடுமாறியதை நிர்வாகம் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த வாய்ப்பு
2026 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் சூர்யகுமார் யாதவுக்கு மிக முக்கியமானவை. இந்தத் தொடர்களில் அவர் தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே, 2028 வரை கேப்டனாக நீடிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்யும். "சூர்யா இப்போது அணியை வழிநடத்துகிறார். ஆனால் ஒரு பேட்டராக அவர் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும். எதிர்கால முடிவுகள் அவரது ரன் குவிப்பை பொறுத்தே அமையும்" என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கம்பீரின் பதவி நீட்டிப்பு மற்றும் சூர்யகுமாரின் கேப்டன்சி குறித்த இறுதி முடிவு, அடுத்த இரு வெளிநாட்டுத் தொடர்களுக்குப் பிறகே எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications