தங்குவதற்கு கூட ரூம் இல்லை.. டெல்லியில் இந்திய வீரர்களுக்கு தந்த ஷாக்.. நைசாக தப்பித்த விராட் கோலி!
டெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சிக்கு சென்ற இந்திய வீரர்களுக்கு தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்துள்ளது பிசிசிஐ. ஹோட்டல் அறை கூட இல்லாமல் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பெற்ற அபார வெற்றியின் மூலம் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை ( பிப்ரவரி 16) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

2வது டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாக்பூரிலேயே முகாமிட்டிருந்த ஆஸ்திரேலிய அதே பிட்ச்-ல் 2 நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு விட்டு டெல்லிக்கு வந்துள்ளனர். மறுபுறம் சற்று ஓய்வுக்கு சென்றிருந்த இந்திய வீரர்கள், சமீபத்தில் இந்திய அணிக்குள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர். காதலர் தினத்தின் போது பல வீரர்கள் தங்களது மனைவியுடன் வெளியே சென்ற புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.

திடீர் ஷாக்
இந்நிலையில் டெல்லிக்கு வந்த அவர்களுக்கு ஷாக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய அணி வீரர்கள் வழக்கமாக தங்கும் தாஜ் பேலஸ், ஐடிசி மயூர்யா போன்ற ஹோட்டல்கள் இந்த முறை இல்லை எனக்கூறிவிட்டனர். டெல்லி நகரம் முழுவதும் அலைந்துவிட்டு, சிறிய ஓட்டல்களுக்கு சென்றுவிடலாம் என்றே முடிவு செய்துவிட்டனர். இறுதியில் ஹோட்டல் லீலாவில் ஓரளவிற்கு அறைகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

காரணம் என்ன?
டெல்லியில் G20 மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்காக உலகமெங்கும் இருந்து பல்வேறு பிரமூகர்கள் டெல்லிக்கு வருகை தந்து வருவதால் 5 ஸ்டார் ஹோட்டல்களில் அனைத்து அறைகளையும் புக் செய்துவிட்டனர். மற்றொருபுறம் இது திருமண சீசன் என்பதாலும் சில அறைகள் புக்காகிவிட்டன. இதன் காரணமாகவே கடைசி நிமிடத்தில் பிசிசிஐ-க்கு அறைகள் கிடைக்காமல் போயுள்ளது.

கோலிக்கு புது வசதி
இதிலும் பல வீரர்களுக்கும் தனித்தனி அறைகளெல்லாம் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட அளவில் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு குருகிராமில் சொந்தமாக வீடு உள்ளது. எனவே அவர் இந்திய அணி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தினமும் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications