கடைசி நேரத்தில் பும்ரா தந்த ட்விஸ்ட்.. முதல் ஒருநாள் போட்டி..இந்திய அணி ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம்
கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11 கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்டால் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியா வென்ற சூழலில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
முதல் போட்டி நாளை கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் போட்டி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டின் இறுதியில் வருகிறது. எனவே அதற்கு தயாராகும் வகையில் தான் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஓய்வில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். திட்டத்தின் முதல் தொடரையே வெல்ல வேண்டும் என்பதற்காக பலமான ப்ளேயிங் 11 உருவாக்கப்பட்டிருக்கிறது.

அணி விவரம்
ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் விளையாட இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளனர். இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அதிரடி ஃபார்மில் உள்ள போதும், சுப்மன் கில் நிலையாக ரன் குவிக்கிறார். அவர் கடந்த 12 போட்டிகளில் 638 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். 102.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 70.88 என்ற சராசரியுடன் விளையாடி வருகிறார். ஷிகர் தவானை போன்று தூண் போல நிலைத்து நின்று சீரான வேகத்தில் ரன் உயர்த்தக்கூடியவர் ஆகும்.

மிடில் ஆர்டர் பேட்டிங்
மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி வாய்ப்பு பெற்றுள்ளார். 4வது இடத்தில் விளையாட தான் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கடும் போட்டி போட்டு வருகின்றனர். என்னதான் சூர்யகுமார் டி20ல் அதிரடி காட்டினாலும், கடந்தாண்டு இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்தவர் ஸ்ரேயாஸ் ஐயர் தான். மிடில் ஆர்டரில் அடிக்கடி இந்திய அணியை மீட்டிருப்பதால் அவருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். லோயர் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா வழக்கம் போல பலம் சேர்க்கிறார்.

பவுலிங் யூனிட்
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் முன்னணி வீரர்களான அக்ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திர சாஹல் களமிறங்குகின்றனர். இந்த ஜோடி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரில் கலக்கியது. வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா திடீரென விலகி அதிர்ச்சி கொடுத்துள்ளார். எனவே முகமது ஷமியுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் கலக்குவார்கள் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications