பாகிஸ்தானின் தோல்வி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கான வாய்ப்பு என்ன??. . இறுதிகட்ட பரபரப்பு!
முல்தான்: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

வெளியேறிய பாகிஸ்தான்
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த தோல்விகளால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான தடைகள் நீங்கியுள்ளது. தற்போதைக்கு புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 75% வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 60 சதவீதத்துடன் 2வது இடத்திலும் உள்ளது. இலங்கை 53.33 % 3வது இடம், இந்திய அணி 52.08% 4வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 42.42% சதவீதத்துடன் 5வது இடத்தில் இருந்தது.

புள்ளிப்பட்டியல்
இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது. இனி பாகிஸ்தானால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. மறுபுறம் இந்திய அணிக்கு மீதம் 6 போட்டிகள் உள்ளன. இதில் 2 போட்டிகள் வங்கதேசத்திலும், 4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் வாய்ப்பு
இந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இவை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது. இதில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி தோல்வியடையும். அப்போது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

இலங்கை அணி நிலை
இதனிடையே இலங்கை அணி 3வது இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணி வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால் தானாக வெளியேறிவிடும். அனைத்து அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் களம் இறுதிகட்டத்தை எட்டி சூடுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications