"ரஞ்சி கோப்பையை கலைத்துவிடுங்கள்".. தேர்வுக்குழு முடிவால் கடுப்பான மஞ்ச்ரேக்கர்.. என்ன நடந்தது?
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் 29 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார். அவர் இந்த சீசனில் மட்டும் மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், முகமது ஷமி அணியில் இல்லாத சூழலில், ஆகிப் நபிக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அவரைத் தவிர்த்துவிட்டு, அனுபவமில்லாத குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரைத் தேர்வு செய்தது.
மஞ்ச்ரேக்கர் ஆவேசம்
இது குறித்து தனியார் இணையதள நிகழ்ச்சியில் பேசிய மஞ்ச்ரேக்கர், "ஆகிப் நபியைத் தேர்வு செய்யாதது ஜீரணிக்க முடியாத ஒன்று. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. ஷமி, சிராஜ் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் போது கூட, ரஞ்சி தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், பிறகு எதற்காக ரஞ்சி கோப்பையை நடத்த வேண்டும்? ரஞ்சி கோப்பையையே கலைத்துவிடுங்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் அணி கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய கதை. அந்த வெற்றியைத் தேடித்தந்த ஒரு வீரருக்கு அணியில் இடமில்லாதது மிகப்பெரிய அநீதி. மற்ற வீரர்களின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது ஆகிப் நபிக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி" என்றார்.
குவியும் கண்டனங்கள்
மஞ்ச்ரேக்கர் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கூறுகையில், தேர்வுக்குழுவின் இந்த முடிவு அபத்தமானது என்றும், இது போன்ற முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறினார். இதேபோல் இர்ஃபான் பதான் கூறுகையில், உள்ளூர் போட்டிகளில் கடினமாக உழைத்து விக்கெட்டுகளைக் குவிக்கும் வீரர்களுக்கு உரிய வெகுமதியாக இந்திய அணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆகாஷ் சோப்ராவும் தேர்வுக்குழுவின் சிந்தனை தவறாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
