10 டி20, 6 ஒருநாள், 4 டெஸ்ட்.. இந்திய அணி அட்டவணை.. அடுத்த 3 மாசத்துக்கு ரெஸ்ட்டே இல்லை
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சற்றும் இடைவெளியின்றி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் தொடக்கமாகவே இந்த டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. இந்திய அணியின் டிசம்பர் மாதம் வரையிலான முழுமையான மற்றும் பரபரப்பான கிரிக்கெட் அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அணி ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடி அதில் கோப்பையையும் வென்றது. அதைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு டிசம்பர் மாதம் வரை வரிசையாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் காத்திருக்கின்றன.

அடுத்த மூன்று மாதங்களுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை:
1. வெஸ்ட் இண்டீஸ் தொடர் (இந்திய மண்ணில்)
- டெஸ்ட் தொடர்: அக்டோபர் 2 துவங்கி, அக்டோபர் 14 உடன் முடிவடைகிறது (இரண்டாவது டெஸ்ட் டெல்லியில் நடைபெறுகிறது).
2. ஆஸ்திரேலியா தொடர் (ஆஸ்திரேலிய மண்ணில்)
- ஒருநாள் தொடர் (3 போட்டிகள்): அக்டோபர் 19 முதல் அக்டோபர் 25 வரை.
- டி20 தொடர் (5 போட்டிகள்): அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை.
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த இரண்டு தொடர்களும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளன.
3. தென்னாப்பிரிக்கா தொடர் (இந்திய மண்ணில்)
- டெஸ்ட் தொடர் (2 போட்டிகள்): நவம்பர் 14 முதல் நவம்பர் 26 வரை.
- ஒருநாள் தொடர் (3 போட்டிகள்): நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை.
- டி20 தொடர் (5 போட்டிகள்): டிசம்பர் 9 முதல் டிசம்பர் 19 வரை.
இந்த மூன்று மாத கால கட்டத்தில் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகள் என மொத்தம் 20 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கு இடையே அதிக இடைவெளியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 19-க்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, இந்திய அணி மீண்டும் ஜனவரி 11 முதல் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கும். ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது.


Click it and Unblock the Notifications