For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட... இவ்வளவு அடி வாங்கியும் டோணிதான் இந்தியாவின் 3வது மிகச்சிறந்த கேப்டனாமே!

By Veera Kumar

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி, வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளபோதிலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே , வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக அணியை வழிநடத்தியதில் டோணி 3வது இடத்தில் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் உண்மை அதுதான். புள்ளி விவரங்களும் இதையே தெரிவிக்கின்றன.

வீட்டில் புலி, வெளியில் எலி

வீட்டில் புலி, வெளியில் எலி

இங்கிலாந்தில் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை அதுவும் படுதோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாறு நெடுகவும், சொந்த நாட்டில் புலியாகவும், வெளிநாட்டில் எலியாகவும்தான் இருந்துள்ளோம் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

லாட்சில் வென்ற இந்தியா

லாட்சில் வென்ற இந்தியா

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரபலமான லாட்ஸ் மைதானத்தில் வைத்து இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், நமது பழைய சோதனை காலம் முடிந்து இனிமேல் இங்கிலாந்து மண்ணில் சாதனை படைக்கப்போகிறோம் என்று இந்திய ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.

அடுத்தடுத்து படுதோல்வி

அடுத்தடுத்து படுதோல்வி

ஆனால் 3வது மற்றும் நான்காவது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் நான்காவது டெஸ்ட் போட்டி, 3 நாளிலேயே முடிவுக்கு வந்ததால் கிரிக்கெட் பிரபலங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அட.. டோணி நல்ல கேப்டனாமே

அட.. டோணி நல்ல கேப்டனாமே

டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு டோணி சிறந்த கேப்டனாக இருக்க முடியாது என்ற பேச்சுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்க தொடங்கியுள்ளன. ஆனாலும், வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கேப்டன்கள் வரிசையில் டோணி 3வது இடத்தில்தான் உள்ளார் என்றால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் புள்ளி விவரங்கள் அதைத்தான் கோடிட்டு காட்டுகின்றன.

முக்காவாசி போட்டியில் நாம்தான் கிங்..

முக்காவாசி போட்டியில் நாம்தான் கிங்..

இந்தியாவில் நடைபெற்ற 30 டெஸ்ட் போட்டிகளுக்கு டோணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் இந்தியா 21 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 6 போட்டிகள், டிரா ஆகியுள்ளன. வெறும் 3 போட்டிகளில்தான் இந்தியா தோற்றுள்ளது. சொந்த மண்ணில் 70 சதவீத வெற்றி சாதனையை இந்தியா வைத்துள்ளது.

வெளிநாட்டில் இரு மடங்கு தோல்வி

வெளிநாட்டில் இரு மடங்கு தோல்வி

அதே நேரம் டோணி தலைமையில் வெளிநாட்டில் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அதில் 6 வெற்றி, 8 டிரா, 13 தோல்வி கண்டுள்ளது. வெற்றியைவிட தோல்வி இருமடங்கு அதிகம். ஒட்டுமொத்த வெற்றி 21 சதவீதம் மட்டுமே.

இந்தியாவில் டோணி பேட்டிங் கிர்ர்...

இந்தியாவில் டோணி பேட்டிங் கிர்ர்...

கேப்டனாக டோணி உள்ளூரில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில், 43 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 1863. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 224 ரன் விளாசியுள்ளார். பேட்டிங் சராசரி 51.75 ஆகும். 5 முறை சதம் அடித்தும், 10 முறை அரை சதம் எடுத்தும் கலக்கியுள்ளார்.

வெளிநாட்டில் டர்ர்...

வெளிநாட்டில் டர்ர்...

வெளிநாட்டு மண்ணில், ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு மட்டுமின்றி, டோணி பேட்டிங்கும் சராசரிக்கும் கீழாகவே உள்ளது. கேப்டனாக டோணி வெளியூரில் விளையாடிய 27 போட்டிகளில், 47 இன்னிங்சுகளில் பேட் செய்துள்ளார். அடித்த ரன்கள் 1441. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 90 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 32.75 மட்டுமே. 15 அரை சதங்கள் எடுத்துள்ள போதிலும், செஞ்சுரி போட்டதில்லை.

கங்காரு நாட்டில் பருப்பு வேகலியே..

கங்காரு நாட்டில் பருப்பு வேகலியே..

டோணி தலைமையிலான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலியாவை தவிர டெஸ்ட் விளையாடும் அந்தஸ்துகொண்ட அனைத்து நாடுகளையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் தோல்வி சதவீதம் அதிகம். டோணி தலைமையில், ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3லும் தோல்வி கண்டதால், அங்கு இந்திய அணியின் வெற்றி விழுக்காடு முட்டைதான்.

இங்கிலாந்து.. நியூசிலாந்து..

இங்கிலாந்து.. நியூசிலாந்து..

வங்கதேசத்தில் விளையாடிய 1 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, 100 விழுக்காடு வெற்றியை தன்வசம் வைத்துள்ளது. இங்கிலாந்தில் 8 போட்டிகளில் விளையாடி, 1 வெற்றி, 1 டிரா, 6 தோல்வியுடன், 13 சதவீத வெற்றியுடன் இந்தியா திருப்திப்பட்டுக்கொண்டுள்ளது. நியூசிலாந்தில் நடந்த 4 போட்டிகளில் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியடைந்து, இந்தியா 25 சதவீத வெற்றி பெற்றுள்ளது.

தெ.ஆப்பிரிக்கா, இலங்கை

தெ.ஆப்பிரிக்கா, இலங்கை

தென் ஆப்பிரிக்காவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. வெற்றி சதவீதம் 20 ஆகும். அண்டை நாடான இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டோணி படை, 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி என பாரபட்சம் பார்க்காமல் அனைத்திலும் தலா ஒன்றை சுவைத்துள்ளது. எனவே 33 சதவீத வெற்றி சாதனை படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 டிரா செய்த இந்திய அணி, தோல்வியடையாமல் தப்பித்துள்ளது. அணியின் வெற்றி சதவீதம் 33 ஆகும்.

நாடு கண்ட சிறந்த கேப்டன் இவர்தான்

நாடு கண்ட சிறந்த கேப்டன் இவர்தான்

இந்திய கிரிக்கெட் கேப்டன்களிலேயே வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டவர் யார் என்றால் அது சாட்சாத், கொல்கத்தா இளவரசர் சவுரவ் கங்குலிதான். கங்குலி தலைமையில் வெளிநாட்டு மண்ணில் 28 முறை பலப்பரிட்சை நடத்தியுள்ள இந்திய அணி, 11 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 7 போட்டிகளை டிரா செய்தது. இருப்பினும் 10ல் தோல்வியடைந்தது. ஆனால் 39 சதவீத வெற்றி சதவீதத்துடன் கங்குலி நம்பர்-1 இடத்தில் முடிசூடா மன்னனாக உள்ளார்.

தடுப்பு சுவருக்கு இரண்டாவது இடம்

தடுப்பு சுவருக்கு இரண்டாவது இடம்

இரண்டாவது இடத்தை பிடித்த கேப்டன், இந்தியாவின் தடுப்பு சுவர் ராகுல் டிராவிட். இவரது தலைமையில் 17 வெளிநாட்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி அதில் 5 வெற்றி, 8 டிரா, 4 தோல்வி என 29 சதவீத வெற்றி பதிவை வைத்துள்ளது. எனவே 21 சதவீத வெற்றி பதிவை வைத்துள்ள டோணி இந்த வரிசையில் 3வது இடத்தை பிடிக்கிறார்.

மூன்றாவது இடம் மூன்று பேருக்கு

மூன்றாவது இடம் மூன்று பேருக்கு

மூன்றாவது இடத்தை மொத்தம் மூன்று கேப்டன்கள் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் என்பது சுவாரசியம். டோணி மட்டுமின்றி நவாப் பட்டோடி, பிஷன்பேடி ஆகியோரும் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பட்டோடி தலைமையில் இந்தியா 21 சதவீத வெற்றி பதிவை வைத்துள்ளது. விளையாடிய போட்டி 13. பிஷன்பேடி தலைமையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 3 வெற்றி, 3 டிரா, 8 தோல்வி என, 21 சதவீத ரெக்கார்ட் வைத்துள்ளது.

கபில் கொஞ்சம் வீக்தான்

கபில் கொஞ்சம் வீக்தான்

எவர்கிரீன் கபில் தேவ் தலைமையில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 2 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என 14 சதவீத வெற்றி சாதனையை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது.

கவாஸ்கரும் சோபிக்கவில்லை

கவாஸ்கரும் சோபிக்கவில்லை

சுனில் கவாஸ்கர் தலைமையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 2 வெற்றி, 10 டிரா, 6 தோல்வி என 11 சதவீத வெற்றி சாதனையை கொண்டுள்ளது.

அசாருதீனுக்கும் இந்த நிலையா?

அசாருதீனுக்கும் இந்த நிலையா?

முகமது அசாருதீன் தலைமையில், 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா, 1 வெற்றி, 16 டிரா, 10 தோல்வி என வெறும் 4 சதவீத வெற்றி சாதனையை வைத்துள்ளது.

பேட்டிங்கில் ஸ்ட்ராங்கு.. கேப்டனாக வீக்கு..

பேட்டிங்கில் ஸ்ட்ராங்கு.. கேப்டனாக வீக்கு..

இறுதியாக, ஆனால் உறுதியாக, லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை மறக்க முடியுமா. வெளிநாட்டு மண்ணில் இந்தியா கண்ட மிக மோசமான டெஸ்ட் கேப்டன் நம்ம மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்தான். ஏனெனில் அவரது தலைமையில் இந்தியா 13 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. 7 போட்டிகளை கஷ்டப்பட்டு டிரா செய்துள்ளோம். 6 போட்டிகள் தோல்வியில் முடிந்தன. ஆக மொத்தத்தில் வெற்றி விழுக்காடு முட்டை.

Story first published: Tuesday, August 12, 2014, 12:31 [IST]
Other articles published on Aug 12, 2014
English summary
India team needs to take blame not dhoni, says statistics and indian cricket fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+